Published:Updated:

`பேசிக்கொண்டே சாப்பிட்டார்...!' - சென்னைப் பெண்ணின் உயிரைப் பறித்த பஜ்ஜி

சென்னையில் பேசிக்கொண்டே பஜ்ஜி சாப்பிட்ட பெண் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்மாவதி
பத்மாவதி

சென்னை சூளைமேடு, காமராஜர் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர், ராயப்பேட்டையில் உள்ள டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலைபார்த்துவருகிறார். இவரின் மனைவி பத்மாவதி (45). இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் கணவருடன் அம்மா வீட்டில் பத்மாவதி குடியிருந்துவந்தார். வழக்கம்போல கங்காதரன், வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் பத்மாவதியும் அவரின் அம்மா சுகுணாவும் இருந்துள்ளனர்.

பஜ்ஜி
பஜ்ஜி
மாதிரிப் படம்

அப்போது இருவரும் பஜ்ஜி சாப்பிட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கடைக்குச் சென்று உருளைக்கிழங்கு பஜ்ஜியை சுகுணா வாங்கிவந்துள்ளார். பின்னர், வீட்டில் இருவரும் பஜ்ஜியைச் சாப்பிட்டுள்ளனர். திடீரென பத்மாவதியின் தொண்டைக்குள் பஜ்ஜி சிக்கிக்கொண்டது. அதனால் அவரால் சத்தம்போட முடியவில்லை. அதைப்பார்த்த பத்மாவதியின் அம்மா, தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனாலும் பத்மாவதியால் சரியாக மூச்சுவிடமுடியவில்லை.

`உயிரைப் பறித்த உளுந்துவடை!’ - குடிபோதையால் புதுவை முதியவருக்கு நேர்ந்த துயரம்

பத்மாவதிக்கு மூச்சுத்திணறல் அதிமானதும் அவரின் அம்மா, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என அவர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு வந்த ஆம்புலன்ஸில் பத்மாவதியைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஊழியர்கள் அழைத்துச் சென்றனர்.

பத்மாவதி
பத்மாவதி

அங்கு பத்மாவதியைப் பரிசோதிக்க டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைக்கேட்டு பத்மாவதியின் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து சூளைமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் சூளைமேடு இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உருளைக்கிழங்கு பஜ்ஜியை பத்மாவதி, பேசிக் கொண்டே சாப்பிட்டுள்ளார். அதனால்தான் மூச்சுகுழாய்க்குள் உருளைக்கிழங்கு பஜ்ஜி சிக்கியது தெரிவந்துள்ளது.