Published:Updated:

`மனநலம் பாதித்த மகனுக்காக வாழ்ந்துவந்தார்!' -மின்வாரிய அலட்சியத்தால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

சென்னை சூளைமேட்டில் செல்போனில் பேசியபடி சென்ற லீமாரோஸ் மீது விழுந்த தீப்பொறியால் உடல் கருகி பலியானார். தாயை இழந்து தவிக்கும் மகனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் சூளைமேடு பொதுமக்களும் தவிக்கின்றனர்.

லீமா ரோஸ்
லீமா ரோஸ்

சென்னை சூளைமேடு ஔவைநகர், புது மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் லீமா ரோஸ் (35). இவர், கடந்த 4-ம் தேதி இரவு 8.45 மணிக்கு மளிகை பொருள்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆண்டவர் தெரு, புதுமேற்கு தெரு சந்திப்பில் உள்ள மின் பாக்ஸூக்கு வரும் மின்வயர் தீப்பிடித்து எரிந்தது. அந்தத் தீப்பொறி நடந்து சென்ற லீமா ரோஸ் மீது விழுந்தது. அவர், நைலான் துணியை அணிந்திருந்ததால் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

லீமாரோஸ்
லீமாரோஸ்

இதனால் அவர் அலறித் துடித்தார். அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தீயை அணைத்து லீமாரோஸைக் காப்பாற்றினர். பின்னர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு லீமாரோஸ் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சூளைமேடு இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்கு பதிந்து விசாரித்தார். சிகிச்சை பெற்றுவந்த லீமாரோஸிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.

அதில் லீமாரோஸ் கூறியிருப்பதாவது, `` நான் மேற்கண்ட முகவரியில் 9 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புதூர். எனக்கு லாரன்ஸ் என்ற மகன் உள்ளான். அவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பான். என் கணவர் ஜேம்ஸ், கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தேன். சென்னையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துவந்தேன். கடந்த 3 ஆண்டுகளாகத் தனியார் கல்லூரியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறேன்.

மின்பாக்ஸ்
மின்பாக்ஸ்

என் மகன் வீட்டின் அருகில் உள்ள கடையில் வேலை பார்த்துவருகிறான். கடந்த 10 நாள்களுக்குமுன் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டான். அதனால் நான் மட்டும் தனியாக வீட்டில் இருந்தேன். 4-ம் தேதி இரவு மளிகைப் பொருள் வாங்க இரவு 8.45 மணிக்கு தங்கையிடம் போனில் பேசியபடி நடந்து சென்றேன். அப்போது தரையிலிருந்து டப் என சத்தம் வந்தது. நான் நடந்து சென்ற இடத்தின் அருகில் இருந்த மின்பாக்ஸில் தீப்பிடித்தது. அடுத்த சில நிமிடத்தில் கரன்ட் கட்டானது. நான் சுதாரிப்பதற்குள் என் நைட்டியில் தீப்பிடித்தது. அங்கிருந்தவர்கள் என்னைக் காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்" என்று கூறியிருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி லீமாரோஸ் இறந்தார். இதையடுத்து விபத்து என வழக்கு பதிந்த போலீஸார், தீ எப்படிப் பிடித்தது என விசாரித்துவருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிந்து லீமாரோஸின் சடலத்தை யாரிடம் ஒப்படைப்பது என போலீஸார் யோசித்தனர்.

இதற்கிடையில் லீமாரோஸுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தூத்துக்குடியில் உள்ள அவரின் அம்மாவுக்குப் போலீஸார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சென்னை வந்தார். இதற்கிடையில் லீமாரோஸ் குடியிருந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் லீமாரோஸின் உறவினர்களும் தேவையான உதவிகளைச் செய்தனர்.

மின்பாக்ஸ்
மின்பாக்ஸ்

சென்னை வந்த லீமாரோஸின் அம்மாவிடம் சடலத்தை போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் லீமாரோஸுக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. ஏற்கெனவே, அப்பாவை இழந்த லாரன்ஸ், தற்போது அம்மாவையும் இழந்து தவிக்கிறார். மகனை எப்படியாவது கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்த லீமாரோஸுக்கு புத்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட சோகமான நிகழ்வு அந்தப் பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி அ.தி.மு.க பிரமுகர் முருகனிடம் பேசினோம். ``மின்பாக்ஸ் அருகே லீமாரோஸ் நடந்துவந்தபோதுதான் பூமியில் புதைக்கப்பட்டிருந்த மின்வயரில் தீப்பிடித்துள்ளது. அந்தத் தீ லீமாரோஸின் மீது பிடித்ததால் அவர் உடல் கருகி இறந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற நாங்கள் கடுமையாகப் போராடினோம். இந்தத் தீ விபத்து நடந்தவுடன் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்தனர். மின்பாக்ஸுக்கு வரும் மின்வயர்களை மாற்றினர். அதனால் சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு மின் இணைப்பு எங்கள் பகுதிக்கு வந்தது.

`சென்னை ஃபர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து' - கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் நாசம்!

லீமாரோஸும் அவரின் மகனும் அந்த வீட்டில் குடியிருந்தனர். மகளிர் சுய உதவிக் குழுவிலும் லீமாரோஸ் இருந்தார். அவருக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டது எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் வருத்தமாக உள்ளது. கஷ்டப்பட்டு மகனை வளர்த்துவந்தார். தீ விபத்துக்கு என்ன காரணம் என போலீஸாரும் மின்வாரிய அதிகாரிகளும் விசாரித்துவருகின்றனர்" என்றார்.

சூளைமேடு ஔவைநகர் புதுத்தெரு மக்கள் கூறுகையில், `தீ விபத்தில் உயிரிழந்த லீமாரோஸின் மகனுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். தீ விபத்து நடந்த இடத்தின் அருகில்தான் பள்ளி உள்ளது. எனவே, இனிமேல் இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும். விபத்து நடந்த இடத்தின் அருகில் நடந்து செல்லக்கூட பயமாக இருக்கிறது' என்கின்றனர் அச்சத்துடன்.