Published:Updated:

கிணற்றுக்குள் விழுந்த சென்னைப் பட்டதாரி பெண்!- காப்பாற்றப்பட்ட புதுமாப்பிள்ளை

சென்னையில் பட்டதாரி பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட புதுமாப்பிள்ளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மெர்சியின் உடல் மீட்பு
மெர்சியின் உடல் மீட்பு

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், காந்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவரின் மகள் மெர்சி (22). பட்டதாரியான இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவரின் உறவினர் அப்பு (24). இன்ஜினீயரான இவர், பட்டாபிராம், நவஜீவன் நகரில் குடியிருந்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டிலும் பேசி முடிக்கப்பட்டது.

மெர்சி
மெர்சி

இவர்களுக்குக் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பிறகு இந்த ஜோடி பல இடங்களுக்குச் சென்று மனம்விட்டுப் பேசி தங்களின் காதலை வளர்த்தனர். வேலை முடிந்து நேற்று மாலை இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டனர். அப்போது முத்தா புதுப்பேட்டை, கண்டிகை பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள விவசாயக் கிணற்றில் அருகில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் படி வழியாக கிணற்றில் இறங்கினர். அப்போது மெர்சியும் அப்புவும் தவறி கீழே விழுந்தனர்.

நீச்சல் தெரியாமல் இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். அப்புவின் சத்தம் கேட்டு விவசாயி ஒருவர் அங்கு வந்தார். அவர் புத்திசாலித்தனமாக அப்புவை காப்பாற்றினார். ஆனால் மெர்சியை அவரால் காப்பாற்ற முடியவில்லை.

அப்பு
அப்பு

இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மெர்சியின் சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மெர்சியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றுக்குள் விழுந்த புதுமாப்பிள்ளை அப்புவிற்கு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய மணமகளின் உறவினர் ஒருவர், ``மெர்சியின் அப்பா தாமஸ், காவல் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் தங்கை மகன்தான் அப்பு. இவர், டிகிரி முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இருவருக்கும் வரும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்றார் வேதனையுடன்.

மெர்சி
மெர்சி

கிணற்றுக்குள் மெர்சியும் அப்புவும் உயிருக்குப்போராடியபோது உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை. ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் இருவரின் அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. கிணற்றுக்குள் விழுந்த அப்பு, அங்கிருந்த படியைப்பிடித்துக் கொண்டார். ஆனால், மெர்சி தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி இறந்துவிட்டார். திருமணத்துக்கு சில மாதங்களே இருந்த சமயத்தில் புதுப்பெண் மெர்சி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.