Published:Updated:

சென்னை: ரூ. 1 லட்சம் முதலீடு; ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,000! - எஸ்.எம்.எஸ்-ஆல் ஏமாந்த பெண் இன்ஜினீயர்

செல்போன்
செல்போன்

செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்ஸை நம்பி ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்தி ஏமாந்த பெண் இன்ஜினீயர் ஒருவர், காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

சென்னை கோயம்பேடு பாரதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பூஜா (22). இவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

``நான் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடிவருகிறேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடைய செல்போன் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் ஒரு மணி நேரத்துக்கு 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணம்
பணம்

பணத்தை முதலீடு செய்ய லிங்க் ஒன்று வந்திருந்தது. அதை ஓப்பன் செய்தபோது செல்போன் செயலி ஒன்று டௌன்லோடு ஆனது. அதன் பிறகு அதில் குறிப்பிட்டிருந்தபடி ஆன்லைன் மூலம் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை செலுத்தினேன். ஆனால் எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டபடி பணம் எதுவும் வரவில்லை. அதனால் மீண்டும் அந்தச் செயலியை ஆய்வு செய்தபோது அது மோசடி எனத் தெரியவந்தது. இதையடுத்து நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. எனவே என்னை நூதன முறையில் ஏமாற்றியவர்களைக் கண்டுபிடித்து பணத்தைத் திரும்ப மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆன்லைன் ரம்மி: எதிர்ப்புறம் விளையாடுவது யார் தெரியுமா? - விளக்கும் சைபர் க்ரைம் அதிகாரி

இதையடுத்து பணத்தை இழந்த பூஜாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பிறகு அவர் பணம் செலுத்திய விவரங்களை போலீஸார் சேகரித்தனர். பூஜாவிடம் ஆசையை ஏற்படுத்தி பணத்தை நூதன முறையில் ஏமாற்றிய செல்போன் செயலி குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் க்ரைமின் போலீஸாரின் உதவியையும் கோயம்பேடு போலீஸார் கேட்டிருக்கின்றனர்.

லாக்டௌன்
லாக்டௌன்

இது குறித்து அண்ணாநகர் காவல் சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இது போன்ற மோசடி நடப்பதாக எங்களுக்குப் புகார்கள் வருகின்றன. கொரோனா ஊரடங்கில் பணம் தேவைப்படுவோரைக் குறிவைத்து மோசடிக் கும்பல் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றிவருகிறது. எனவே செல்போன் நம்பருக்கு வரும் எஸ்.எம்.எஸ்., லிங்க்குகளை நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு