Published:Updated:

சென்னை: மூத்த மகள் கொலை; கடன் தொல்லையால் பேராசிரியை தற்கொலை! 2-வது மகளுடன் எஸ்கேப்பான கணவர் கைது

பேராசிரியை குடும்பத்தினர்
பேராசிரியை குடும்பத்தினர்

சென்னையில் அழுகிய நிலையில் பேராசிரியை, அவரின் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கில் பேராசிரியையின் கணவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை கோட்டூர்புரம், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் கீதாகிருஷ்ணன் (53). இவரின் மனைவி கல்பனா (36). இவர்களுக்குக் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்கு குன்னாலிஸ்ரீ (14), மானஷா (3) என இரண்டு மகள்கள். கல்பனா, தரமணியிலுள்ள தனியார் கல்லூரியில் இந்திப் பேராசிரியையாகப் பணியாற்றிவந்தார். கீதா கிருஷ்ணன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்தார். கல்பனா, தன் வருமானத்தில் குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்திவந்தார். வேலைக்குச் செல்லாத கீதா கிருஷ்ணன், பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார்.

பேராசிரியை வீடு
பேராசிரியை வீடு

அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் பேராசிரியை கல்பனாவின் வீடு சில தினங்களாகவே பூட்டிக்கிடந்தது. கடந்த 9-ம் தேதி வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் தண்டபாணி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, அழுகிய நிலையில் கல்பனா, குன்னாலிஸ்ரீ ஆகியோரின் சடலங்கள் கிடந்தன. கீதாகிருஷ்ணன், மானஷா ஆகியோர் மாயமாகியிருந்தனர். கல்பனா, குன்னாலிஸ்ரீ ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து இருவரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தேக மரணம் என்ற பிரிவின்கீழ் கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கீதா கிருஷ்ணன், மானஷாவைக் கண்டுபிடித்துத் தரும்படி கல்பனாவின் சகோதரி ரேணுகாதேவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் இருவரையும் தேடிவந்தனர். கீதா கிருஷ்ணனின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

கல்பனாவின் சகோதரி ரேணுகாதேவி கொடுத்த புகாரில், ``என்னுடைய கணவரின் தம்பியான கீதா கிருஷ்ணனைக் காதலித்து கல்பனா திருமணம் செய்துகொண்டார். வேலைக்குச் செல்லாத கிருஷ்ணன், எங்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தார். என் தங்கைக்காகவும், அவரின் குழந்தைகளுக்காகவும் சொத்தை விற்றுக்கூட பணம் கொடுத்தேன். இருப்பினும், என் தங்கையையும் குழந்தைகளையும் கீதா கிருஷ்ணன் கவனிக்கவில்லை. 2-ம் தேதி முதல் காணாமல்போன குழந்தை மானஷா, கீதா கிருஷ்ணனைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சித்ரா மரணம்: `செல்போன் பதிவுகள்; சிசிடிவி காட்சி! -தாய், சக நடிகர்களிடம் விசாரிக்க போலீஸ் முடிவு
பேராசிரியை தங்கியிருந்த தெரு
பேராசிரியை தங்கியிருந்த தெரு

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கீதா கிருஷ்ணன், திருப்பதியிலிருந்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் குழந்தையுடன் வரும் ரகசியத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் கீதா கிருஷ்ணனைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், ``கீதா கிருஷ்ணனுக்குக் கடன் தொல்லை இருந்துவந்தது. அது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 2-ம் தேதி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி மூத்த மகள் குன்னாலிஸ்ரீக்கு பூச்சி மருந்தைக் கலந்து கல்பனா கொடுத்திருக்கிறார். அதைக் குடித்த பிறகும் குன்னாலிஸ்ரீ இறக்கவில்லை. அதனால் கல்பனாவும் கீதாகிருஷ்ணனும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி குன்னாலிஸ்ரீயைக் கொலை செய்திருக்கின்றனர். அதன் பிறகு கல்பனா பூச்சி மருந்தைக் குடித்திருக்கிறார். அதில் அவர் இறக்கவில்லை. அதனால், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

மூத்த மகளும், மனைவியும் அடுத்தடுத்து இறந்ததைப் பார்த்த கீதா கிருஷ்ணன் அதிர்ச்சியில் உறைந்தார். அதனால் அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவிலிருந்து மனம் மாறினார். அந்தச் சமயத்தில் தூங்கிக்கொண்டிருந்த 2-வது மகள் மானாஷாவைக் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் கீதாகிருஷ்ணன். வீட்டுக்குள் கல்பனாவும் குன்னாலிஸ்ரீயும் இறந்துகிடந்தனர். சென்னையிலிருந்து திருப்பதிக்கு மகளுடன் சென்றிருக்கிறார் கீதாகிருஷ்ணன். கையில் பணம் இல்லாததால் மீண்டும் நண்பரிடம் பணம் வாங்க சென்னைக்கு வந்தபோது சிக்கிக்கொண்டார். அதனால், மகளைக் கொலை செய்த குற்றத்துக்காக கீதா கிருஷ்ணனைக் கைதுசெய்திருக்கிறோம். இரண்டாவது மகள் மானஷாவைக் உறவினரிடம் ஒப்படைத்திருக்கிறோம் என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு