Published:Updated:

`சம்பளம் ரூ.12,000; ஆடம்பரமாக வாழ ஆசை'- இன்ஜினீயர் காதலனுடன் சிக்கிய பி.டெக் காதலி

இருவரும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று நோட்டமிட்டோம். அப்போது, உறவினர்கள் வீடுகளின் சூழலைத் தெரிந்துகொள்வோம். குறிப்பாக வீட்டின் சாவிகளை மறைத்து வைக்கும் இடத்தைப் பார்த்துக்கொள்வோம்.

சிசிடிவியில் சிக்கிய இன்ஜினீயர் காதல் ஜோடி
சிசிடிவியில் சிக்கிய இன்ஜினீயர் காதல் ஜோடி

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட காரம்பாக்கம், செங்குட்டுவன்தெருவில் வசிப்பவர் ஜெகதீசன். இன்ஜினீயர். இவரின் வீட்டில் கடந்த 21-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின்பேரில் உதவி கமிஷனர் மகிமை வீரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா, காவலர் அரிதாஸ் ஆகியோர் விசாரித்தனர். சிசிடிவி கேமராவால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்திக்கேயன் (24), அவரின் காதலியான மதுரவாயலைச் சேர்ந்த நித்யா (24) எனத் தெரிந்தது. இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காதல் ஜோடி கார்த்திக், நித்யா
காதல் ஜோடி கார்த்திக், நித்யா

நித்யா போலீஸாரிடம், ``நான் பி.டெக் படித்துள்ளேன். பாட்டி வீட்டில் தங்கியிருந்து 12,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துவருகிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது கார்த்திக் எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்துவருகிறோம். கார்த்திக்கிற்கும் குறிப்பிடும் வகையில் சம்பளம் இல்லை. இன்ஜினீயரிங் படித்துவிட்டு குறைந்த சம்பளத்தில் நாங்கள் வாழ்ந்துவந்தோம். இதனால் சீக்கிரத்தில் பணக்காரர்களாகி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டோம்.

புராஜெட்களைச் செய்து பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டோம். இதற்காக பல ஆர்டர்களைப் பெற்றோம். ஆனால், அதில் எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்தான் திருடத் திட்டமிட்டோம். வெளிஇடங்களில் திருடி சிக்கிக் கொண்டால் போலீஸாரிடம் தப்ப முடியாது எனக் கருதினோம். இதனால் உறவினர்கள் வீடுகளில் திருட முடிவு செய்தோம். அதன்படி இருவரும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று நோட்டமிட்டோம். அப்போது, உறவினர்கள் வீடுகளின் சூழலைத் தெரிந்துகொள்வோம். குறிப்பாக வீட்டின் சாவிகளை மறைத்து வைக்கும் இடத்தைப் பார்த்துக்கொள்வோம். அதன்பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்று சாவியை எடுத்து டூப்ளிக்கேட் சாவி தயாரிப்போம்.

கொள்ளை நடந்த இடம்
கொள்ளை நடந்த இடம்

வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜெகதீசன், கார்த்திக்கின் உறவினர். அவரின் வீட்டுக்குக் கடந்த 11-ம் தேதி சென்றோம். அப்போது ஜெகதீசனிடம் புராஜெக்ட் தொடர்பாக ஆலோசித்தோம். அப்போது அவரின் வீட்டின் சாவியை வைக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டோம். ஜெகதீசன் வீட்டில் பகலில் யாரும் இருக்க மாட்டார்கள். இதனால் கடந்த 21-ம் தேதி ஜெகதீசனுக்கு கார்த்திக் போன் செய்தார். புராஜெக்ட்டுக்காக நுங்கம்பாக்கம் வரும்படி கூறினார். ஜெகதீசன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதை மறைந்திருந்து நோட்டமிட்டோம். பிறகு நாங்கள் இருவரும் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்றோம்.

ஜெகதீசன் வீட்டில் ஏராளமான நகைகள், பணம் இருக்கும் என நினைத்தோம். ஆனால், குழந்தைகள் அணியும் நகைகள் மட்டுமே வீட்டின் பீரோவில் இருந்தது. இதனால் கிடைத்தது வரை லாபம் என அதை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தோம். சிசிடிவி கேமராவில் எங்களின் முகம் தெரிந்துவிடாமலிருக்க கவனமாகச் செயல்பட்டோம். ஆனால், சில இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் எங்களின் முகம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதை நாங்கள் கவனிக்கவில்லை. திருடிய நகைகளை விற்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குள் சிசிடிவி கேமராவால் போலீஸிடம் சிக்கிக்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

சிசிடிவியில் சிக்கிய காதல் ஜோடி
சிசிடிவியில் சிக்கிய காதல் ஜோடி

கார்த்திக் மற்றும் அவரின் காதலி நித்யா குறித்து இன்னோர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கார்த்திக்கும் நித்யாவும் உறவினர் வீட்டில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தச் சம்பவத்தில் சிக்கிக்கொண்ட கார்த்திக் மற்றும் நித்யாவை உறவினர் பிடித்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அப்போது நகை, பணத்தை திரும்பத் தந்துவிடுகிறோம். எங்களை மன்னித்து விடுங்கள், ஜெயிலுக்குப் போனால் எங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என கார்த்திக்கும் நித்யாவும் உறவினர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அதனால் உறவினர்கள், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்பிறகு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்த ஜோடி வந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் திருந்தாத இந்த ஜோடி உறவினர் ஜெகதீசனைத் திட்டமிட்டு ஏமாற்றி வீட்டில் கொள்ளையடித்தபோது சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஆடம்பரமாக வாழத்தான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் கூறியுள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் விலை உயர்ந்த ஐ போன்களைத்தான் பயன்படுத்திவந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நித்யா
நித்யா

கார்த்திக்கின் அப்பா, கோயம்பேடு மார்க்கெட்டில் பழவியாபாரம் செய்துவருகிறார். மகன் திருட்டு வழக்கில் சிக்கிய தகவலைக் கேட்டு அவரும் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைப்போல நித்யாவின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். இன்ஜினீயரிங் படித்துவிட்டு எத்தனை இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் இந்தக் காதல் ஜோடி ஈடுபட்டது குறித்து வளசரவாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.