Published:Updated:

திருடிய பணத்தை ஆடம்பரமாக செலவழிக்கல, ஏனென்றால்..! - வீட்டுவேலை செய்யும் உஷா வாக்குமூலம்

சென்னை தொழிலதிபர் வீட்டில் கள்ளச்சாவி மூலம் லட்சக்கணக்கில் பணத்தைத் திருடிய பெண், போலீஸாரிடம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 வீட்டு வேலை செய்த இடத்தில் திருடிய  பெண்
வீட்டு வேலை செய்த இடத்தில் திருடிய பெண்

சென்னை அபிராமபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர், பெரியண்ணா. தொழிலதிபரான இவர், தன் வீட்டில் வேலைபார்த்த உஷா என்பவர்மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி உஷாவைக் கைதுசெய்து, அவரிடமிருந்த 18 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீஸாரிடம் உஷா அளித்த வாக்குமூலத்தில், ``நான், கடந்த 5 ஆண்டுகளாக பெரியண்ணன் வீட்டில் வேலைபார்த்து வருகிறேன். எனக்கு மாதம் 8,000 ரூபாய் சம்பளம். பெரியண்ணன் வீடு மட்டுமல்லாமல் இன்னும் சில வீடுகளிலும் வேலைபார்த்து, அதன்மூலம் கிடைக்கும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்திவந்தேன். எனக்கு ஒரு மகள். அவருக்கும் திருமணமாகிவிட்டது.

ரூபாய் நோட்டுக்கள்
ரூபாய் நோட்டுக்கள்

பெரியண்ணன் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் என்னை முழுமையாக நம்பினார்கள். இதனால் அந்த வீட்டில் சுதந்திரமாக வேலை செய்துவந்தேன். சில ஆண்டுகளுக்கு முன், படுக்கையறையை சுத்தம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, அந்த அறையில் உள்ள பீரோவிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை எடுத்தனர். அதைப்பார்த்தபோது என் மனம் மாறியது. குடும்பக் கஷ்டம் காரணமாக எனக்கு அதிக அளவில் பணத்தேவை இருந்தது. இதனால், பீரோவில் உள்ள பணத்தைத் திருட முடிவு செய்தேன்.

கள்ளச்சாவி மூலம் பணத்தைத் திருடலாம் எனத் திட்டமிட்டேன். இதற்காக, பீரோவில் இருந்த சாவி மற்றும் படுக்கையறையின் சாவி ஆகியவற்றுக்கு டூப்ளிக்கேட் சாவிகளை ரெடி பண்ணினேன். வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், சுத்தம் செய்வதுபோல படுக்கையறைக்குள் செல்வேன். பிறகு, என்னிடம் உள்ள சாவிகளைக் கொண்டு பீரோவிலிருந்து பணத்தை எடுக்கத் தொடங்கினேன். முழுப் பணத்தை எடுத்தால் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் முதலில் ஆயிரக்கணக்கில் திருடத் தொடங்கினேன். ஆனால், அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் எனக்கு தைரியம் வந்தது.

fir
fir

எனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் கள்ளச்சாவி மூலம் பீரோவிலிருந்த பணத்தைட் திருடிவந்தேன். பீரோவில் தங்க நகைகள் இருக்கும். ஆனால், அதைத் திருடினால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அதை எடுக்க மாட்டேன். நான் வேலைபார்த்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் படுக்கையறையில் மட்டும் கேமரா இல்லை. அது எனக்கு திருட வசதியாக இருந்தது.

நான் திருடிய பணத்தை என் தேவைகளுக்குப் பயன்படுத்தினேன். எனக்கு சிறுவயது முதல் தங்க நகைகள் மீது ஆசை அதிகம். அதனால், திருடிய பணத்தில் தங்க நகைகளை வாங்கினேன். அதை அணிந்துகொண்டு விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்று பந்தா காட்டினேன். நாலு வீட்டில் நான் வேலைபார்த்ததால் என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால், வேலைக்குச் செல்லும்போது மட்டும் நகைகளை அணிய மாட்டேன்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

எனக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காகத்தான் பணத்தை சேர்த்துக் கொண்டிருந்தேன். இதனால்தான் பெரியண்ணன் வீட்டில் திருடிய பணத்தை ஆடம்பரமாகச் செலவழிக்கவில்லை. ஆயிரக்கணக்கில் திருடும்போது நான் சிக்கவில்லை. ஆனால், லட்சக்கணக்கில் திருடியபோதுதான் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

வேலை செய்த வீட்டில் 5 ஆண்டுகளாக ரூ.19,85,000 திருட்டு!- ரகசிய கேமராவால் சிக்கிய சென்னைப் பெண்

வீட்டின் படுக்கையறையில் யாரும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதில்லை. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய உஷா, படுக்கையறையிலிருந்து பணத்தைத் திருடியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 19,85,000 ரூபாயை உஷா திருடியதாக பெரியண்ணன் புகார் கொடுத்திருந்தாலும் அவரிமிருந்து 18,00,000 ரூபாயை மட்டுமே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரியண்ணன் வீடு தவிர வேறு சில வீடுகளிலும் உஷா வேலைபார்த்துவந்துள்ளார். ஆனால், அந்த வீடுகளின் உரிமையாளர்கள் யாரும் உஷா மீது புகார் கொடுக்கவில்லை.

திருட்டு
திருட்டு

உஷாவிடம் போலீஸார் விசாரித்தபோது, இதற்கு மேல் என்னிடம் கேள்விகள் கேட்டால், என் உயிரை இந்த இடத்திலேயே மாய்த்துக் கொள்வேன் என்று கூறியதோடு தன்னை போட்டோ எடுக்கவும் அனுமதிக்கவில்லை என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

வீட்டு வேலை செய்த பெண் உஷா, கடந்த 5 ஆண்டுகளாகத் திருடிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.