சென்னை: திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்! - மணமகளின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்த கொடூரம்

திருமணத்துக்கு முன்பே மணமகனின் சுயரூபம் தெரிந்ததால், மணமகளின் வீட்டினர் திருமணத்தை நிறுத்தினர். அதனால் ஆத்திரமடைந்த மணமகன், மணமகளின் ஆபாசப் படங்களை நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.
வடசென்னையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணின் ஆபாசப் படங்கள் வெளியானதால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். படங்கள் வெளியானது தொடர்பாக விசாரித்தபோது இளம்பெண்ணுக்கும், ஓட்டேரியைச் சேர்ந்த முகமது ஆசான் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முகமது ஆசானின் நடவடிக்கை பிடிக்காமல், மணமகள் வீட்டினர் திருமணத்தை நிறுத்தினர்.

அதன் பின்னர் இளம்பெண்ணின் வீட்டினர் வேறு ஒரு வாலிபரைப் பார்த்து, அவருடன் பெண்ணுக்குத் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த முகமது ஆசான், அந்தப் பெண்ணின் ஆபாசப் படங்களைத் தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து முகமது ஆசான் மீது புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் முகமது ஆசான் மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்தனர். அவரின் செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில் ``முகமது ஆசானுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகு இருவரும் வீடியோ காலில் பேசியிருக்கின்றனர்.

அப்போது அந்தப் பெண்ணின் ஆபாசப் படங்களை முகமது ஆசான் எடுத்திருக்கிறார். திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் அந்தப் புகைப்படங்களை நண்பருக்கு அனுப்பியிருக்கிறார். முகமது ஆசான் யாருக்கெல்லாம் படங்களை அனுப்பினார் என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.
விரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் இளம்பெண்ணின் ஆபாசப் படங்கள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.