Published:Updated:

`முதலாளிக்கு லட்சங்களில் கடன் கொடுத்த ஊழியர்!' - சென்னையை அதிரவைத்த தற்கொலை வீடியோ, டைரி

சென்னையில் வேலைபார்த்த கடையின் முதலாளிக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்த ஊழியர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன் கண்ணீர்மல்க வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

ஊழியர் செல்லதுரை
ஊழியர் செல்லதுரை

சென்னை திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகர், 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அந்தப் பகுதியில் கடை நடத்திவருகிறார். இவரின் மகன் செல்லதுரை (32). இவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமனுக்குத் தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தார்.

டைரி
டைரி

பின்னர், செல்லதுரையின் சடலத்தைக் கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். செல்லதுரையின் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், சிலருக்குக் கடனாகப் பணம் கொடுத்துள்ளார். கொடுத்தப் பணத்தை வசூலிக்க முடியாத மனவருத்தத்தில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன் டைரியில் 7 பக்கங்களுக்கு யார் யாருக்கெல்லாம் தான் கடன் கொடுத்த விவரங்களைக் குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளார் செல்லதுரை. அதோடு கண்ணீர்மல்க அவர் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில், `எல்லோரையும் நான் கஷ்டப்படுத்திவிட்டேன். கொடுத்தப் பணத்தை என்னால் திரும்ப வாங்க முடியவில்லை.

செல்லதுரை
செல்லதுரை

நான் எழுதிய டைரியை இந்தப் பீரோவில் வைத்துள்ளேன். (அதையும் வீடியோவாக எடுத்துள்ளார்). எல்லோரையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். உடம்புக்குத் தேவையானதை சாப்பிடுங்கள். எனக்கு வேற யோசனை தோணவில்லை. நான் உங்களோடு வாழ ஆசைப்பட்டேன். எனக்குக் கிடைத்தது மாதிரி அம்மா, அப்பா வேற யாருக்கும் கிடைக்கவில்லை' என்பதோடு வீடியோ முடிவடைகிறது.

டைரியில் கடன் கொடுத்த விவரங்கள் இருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். செல்லதுரையின் குடும்பத்தினர், கடன் பெற்ற யாரு பெயரையும் குறிப்பிட்டுக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இதனால் செல்லதுரை மனஅழுத்ததில் தற்கொலை செய்துகொண்டதாகவே போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலையிலிருந்து நின்றுவிட்டார். பணத்தைத் திருப்பிக் கேட்டார். நான் கொடுப்பதாகக் கூறியிருந்தேன்.
ஹோட்டல் உரிமையாளர் குமார்

செல்லத்துறையின் மரணம் குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய போலீஸார், `` திருமுல்லைவாயல் பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஒன்றில் செல்லதுரை வேலைபார்த்து வந்துள்ளார். அந்த ஹோட்டலை நடத்தும் உரிமையாளர் குமாருக்கும் செல்லதுரைக்கும் நீண்டநாள் பழக்கம். அதன் அடிப்படையில் ஹோட்டல் முதலாளி குமாருக்கு ஊழியர் செல்லதுரை லட்சக்கணக்கில் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணம் தொடர்பாக இருவருக்குமிடையே சண்டை வந்துள்ளது என்ற தகவல் கிடைத்தது. மேலும், முதலாளிக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்த ஊழியர் என்ற தகவலும் அந்தப் பகுதியில் பரவியது. கடன் திரும்ப வராத சோகத்தில் இந்த முடிவை எடுத்துவிட்டார்" என்கின்றனர்.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் குமாரிடம் கேட்டோம். ``எனக்கு சின்ன வயதிலிருந்தே செல்லதுரையையும் அவரின் குடும்பத்தினரையும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன் அவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அவரின் தங்கை திருமணத்தின்போது 1,80,000 ரூபாய் கொடுத்தேன். அதன்பிறகு அவ்வப்போது பணம் கொடுத்துள்ளேன். என்னுடைய ஹோட்டலில் வேலை பார்த்த செல்லதுரை, கடந்த 3 மாதங்களுக்குமுன் வேலையிலிருந்து நின்றுவிட்டார். பணத்தைத் திருப்பிக் கேட்டார். நான் கொடுப்பதாகக் கூறியிருந்தேன்.

செல்லதுரை
செல்லதுரை
`நீங்க சந்தோஷமாக இருக்கணும்; நான் உயிரிழக்கிறேன்'- திருச்சியிலும் மாணவிகள் தற்கொலை?

அதற்குள் இந்த முடிவை எடுத்துவிட்டார். அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஆனால், எனக்கு கடன் கொடுத்ததால்தான் செல்லதுரை இறந்துவிட்டதாகத் தவறான தகவல் பரவிவருகிறது. அதில் உண்மை இல்லை. நான் செல்லதுரையிடம் கடன் வாங்கியது அவரின் குடும்பத்தினருக்குத் தெரியும்" என்றார்.

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வடபழனியில் தங்கியிருந்து சினிமாவில் ஆர்ட் டைரக்டராக வேலை பார்த்துவந்துள்ளார் செல்லதுரை. அதில் அவருக்குக் கிடைத்த பணத்தைத்தான் நண்பர்களுக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். திருமணமாகாத அவர், கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிக்க முடியாமல் இந்த முடிவை எடுத்துவிட்டார் என்கின்றனர் அவரின் நண்பர்கள்.

வழக்கமாகக் கடன் வாங்கியவர்கள்தான் தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டதாகத் தகவல்கள் வரும். ஆனால், கடன் கொடுத்தவரே தற்கொலை செய்த தகவல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.