சென்னை: `பூட்டிய அறைக்குள் சித்ரவதை; முகத்தில் தையல்!' - வட்டி கொடுக்காததால் கொடூரக் கொலை

சென்னையில் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்காததால் மயான ஊழியர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை, மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெகன் (45). இவர், சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5-வது மண்டலத்துக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் மாநகராட்சி மயானத்தில் ஊழியராகப் பணியாற்றிவந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இரண்டு மகன்களுடன் செங்குன்றத்தை அடுத்த அலமாதி கிராமத்தில் ஜெகன் குடியிருந்தார். மதுவுக்கு அடிமையான ஜெகன், வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் ஜெகனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இந்தநிலையில், ஒருநாள் கடன் கொடுத்தவர்கள், ஜெகனை செங்குன்றத்திலிருந்து வண்ணாரப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். அங்கு ஜெகனை ஓர் அறைக்குள்வைத்துப் பூட்டி அவரிடம் பணம் கேட்டு, அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஜெகன் உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த அந்தக் கும்பல், ஜெகனை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டது. ஜெகனை அவரின் உறவினர்கள் தேடியபோதுதான் அவர் பூட்டிய வீட்டுக்குள் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஜெகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜெகனின் மரணம் குறித்து போலஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மயான ஊழியரான ஜெகன், தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய பணத்தையும் அதற்குரிய வட்டியையும் கொடுக்காமல் இருந்திருக்கிறார். அதனால், கடன் கொடுத்தவர்கள், ஜெகனை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றனர்.
ஜெகனின் உறவினர்கள் கூறுகையில், ``ஜெகனின் முகத்தில் வெட்டி, அதைத் துணி தைக்கும் ஊசியால் தைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு, கடன் கொடுத்தவர்கள் ஜெகனைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் ஜெகனிடம் மகளின் திருமணத்துக்காக வங்கியில் கடன் வாங்கச் சொல்லி, அந்தப் பணத்தையும் கடன் கொடுத்தவர்கள் அபகரித்திருக்கிறார்கள். அதன் பிறகும் பணம் கேட்டு தொல்லை கொடுத்து தற்போது கொலையே செய்துவிட்டனர். வாங்கிய கடனுக்கு மேல் வட்டியே கொடுத்துவிட்டோம். ஆனாலும், கடன் கேட்டு ஜெகனுக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.
ஜெகனுக்குக் கடன் கொடுத்த சசி, சூர்யா, வடிவேலு, சித்ரா மற்றும் சிலர் சேர்ந்துதான் அவரைக் கடுமையாகத் தாக்கியதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஜெகன் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர்.