Published:Updated:

`முதல் கொள்ளை சக்ஸஸ்; காட்டிக்கொடுத்த நீல நிறச் சட்டை!’ - குதிரை ரேஸுக்காகத் திருடிய சென்னை இளைஞர்

இளைஞர் சக்திவேல்
இளைஞர் சக்திவேல்

சென்னை கொளத்தூரில் குதிரை ரேஸுக்குப் பணம் தேவைப்பட்டதால் யூடியூப் பார்த்து கொள்ளையடித்த இளைஞர் சக்திவேலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் சென்னை கொளத்தூரில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 45 சவரன் தங்க நகைகள், 48,000 ரூபாய் கொள்ளைப்போயின. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சிசிடிவி உதவியால் மே மாதத்தில் சக்திவேலை (29) போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்த போது அவரைத் திருடத் தூண்டியது குதிரை ரேஸ் எனத் தெரியவந்தது. குதிரை ரேஸுக்கு அடிமையான சக்திவேல், முதலில் வேலையை இழந்தார். பின்னர் குதிரை ரேஸுக்காக மனைவியின் நகைகள், டூவீலரை அடகு வைத்துப் பணத்தை இழந்துள்ளார். குதிரை ரேஸ் மோகத்தால் இன்று கொள்ளை வழக்கில் சக்திவேல் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

சக்திவேல்
சக்திவேல்

திருட்டு வழக்கில் சக்திவேல் சிக்கியது எப்படி என நம்மிடம் விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``கொரோனா ஊரடங்கு முன் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதன்பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லவில்லை. மேலும், கொரோனா பணி காரணமாக கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலக்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. சிசிடிவி கேமரா பதிவுகள்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தைக் கண்டுபிடிக்க முக்கியக் காரணமாக இருந்தது. 80-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது நீல நிறச் சட்டை அணிந்த இளைஞர் ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து அவரைக் குறித்த விவரங்களைச் சேகரித்தோம். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை பெரம்பூர் வெற்றிநகரைச் சேர்ந்த சக்திவேல் (29) என்பதை உறுதிப்படுத்தினோம்.

சக்திவேலுக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. அம்மா, திருவிக நகர் பகுதியில் பூ வியாபாரம் செய்துவருகிறார். 9-ம் வகுப்பு வரை படித்த சக்திவேல் கூரியர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். குதிரைப் பந்தயம் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என சக்திவேலுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் கிண்டியில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் சம்பளப் பணத்தைக் கட்டியுள்ளார். சில நேரங்களில் பணம் இரட்டிப்பானாலும் பல நேரங்களில் பணத்தை சக்திவேல் இழந்துள்ளார். அதனால் சம்பளம், மனைவியின் நகைகள், டூவீலர் என அனைத்தையும் குதிரைப் பந்தயத்தில் இழந்துள்ளார். இருப்பினும் குதிரை ரேஸ் மோகத்திலிருந்து சக்திவேல் மீளவில்லை.

`கொள்ளையனுக்கு தெரிந்த ஏடிஎம் இயந்திரத்தின் பாஸ்வேர்டு' -கிருமிநாசினி தெளிக்க வந்தவரால் அதிர்ச்சி #Chennai
ஆட்டோவிலிருந்து இறங்கும் சக்திவேல்
ஆட்டோவிலிருந்து இறங்கும் சக்திவேல்

இந்தச் சமயத்தில் சரியாக வேலைக்குச் செல்லாத காரணத்தால் கூரியர் நிறுவன வேலையும் பறிபோனது. அதனால் யூடியூப் மூலம் சக்திவேல் வேலைவாய்ப்புகளைத் தேடியுள்ளார். அப்போது யூடியூப்பில் திருட்டு தொடர்பான வீடியோக்களை அவர் பார்த்துள்ளார். அதில் திருடுவது எப்படி என்பதைப் பார்த்த சக்திவேல், திருட முடிவு செய்துள்ளார். இதற்காக வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் கொளத்தூர் பகுதிக்கு வந்துள்ளார். டிப்டாப்பாக உடையணிந்த சக்திவேல், கையில் ஒரு பேக்கையும் எடுத்துவந்துள்ளார். கொளத்தூர் பகுதியில் பிற்பகலில் நடந்தே சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளார். அப்போதுதான் கோபாலகிருஷ்ணனின் வீடு பூட்டப்பட்டிருந்ததும் சக்திவேல், காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார்.

யூடியூப்பில் கற்ற திருட்டு வித்தை மூலம் கதவின் பூட்டை எளிதாக சக்திவேல் உடைத்துள்ளார். பின்னர், உள்ளே சென்றபோது இரண்டு பீரோக்கள் இருந்தன. அதில் ஒரு பீரோவிலிருந்த 48,000 ரூபாய் பணத்தை முதலில் எடுத்த சக்திவேல், அதை பேக்கில் வைத்துள்ளார். பின்னர் அடுத்த பீரோவைத் திறந்து அதிலிருந்த நகைகளை எடுத்துள்ளார். பதற்றத்தில் சில நகைகள் கீழே விழுந்துள்ளன. யாரும் வந்துவிடக்கூடாது என்ற பயத்தில் கிடைத்த நகைகளுடன் சக்திவேல் தப்பிச் சென்றுள்ளார். கொளத்தூரிலிருந்து நடந்தே ரெட்டை ஏரிப் பகுதிக்கு வந்துள்ளார். அங்குதான் சக்திவேலின் அம்மா வீடு இருந்துள்ளது.

`இந்தச் சோம்பேறியைப் பிடித்து ஜெயிலில் போடுங்க!' - யூடியூப் பார்த்து திருடியவரின் மனைவி ஆவேசம்
சக்திவேலைப் பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன்
சக்திவேலைப் பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன்

பின்னர் அங்கு செல்லாமல் மீண்டும் நடந்தே பெரம்பூர் வெற்றிநகரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு யாருக்கும் தெரியாமல் திருடிய நகைகளை மறைத்து வைத்த சக்திவேல், பணத்தை மட்டும் செலவழித்துள்ளார். திடீரென இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என சக்திவேலிடம் அவரின் குடும்பத்தினர் கேட்டபோது `இவ்வளவு நாளாக நான் சம்பாதிக்காததால் என்னை எல்லோரும் சோம்பேறி எனத் திட்டினீர்கள். மேலும் யாரும் என்னை வீட்டில் மதிக்காமல் இருந்தீர்கள். அதனால்தான் புதிய பிசினஸ் ஒன்று மூலம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் சக்திவேல் வெளியில் செல்லவில்லை. அதனால்தான் திருடிய நகைகளை விற்காமல் வைத்திருந்துள்ளார். முதல் கொள்ளைச் சம்பவத்திலேயே சக்திவேலுக்கு நகையும் பணமும் கிடைத்ததால் அவர் அடுத்த கொள்ளைச் சம்பவத்துக்குத் திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் அதற்குள் எங்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு