Published:Updated:

மூத்த மகளைக் கொலை செய்த தாய் - 2வது குழந்தையின் கருக்கலைந்ததும் விபரீத முடிவு

 மகளைக் கொலை செய்த லதா
மகளைக் கொலை செய்த லதா

2வதாகக் கருவுற்றதும் மகிழ்ச்சியில் இருந்த லதாவுக்குத் திடீரென கருக்கலைந்தது. அதனால் மனவிரக்தியிலிருந்த அவர், ஒரு வயது மகளுடன் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் செல்போன் கடையில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி லதா (27). இவரின் மகள் நிக்ஷிதா (1). இரண்டாவதாக லதா, கருவுற்றார். அதனால் சத்யநாராயணன், லதா ஆகியோர் சந்தோஷமடைந்தனர். இந்தநிலையில் லதாவுக்குத் திடீரென ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது லதாவின் கர்ப்பம் கலைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் லதா மனவேதனையடைந்தார்.

குழந்தை
குழந்தை

வீட்டுக்குத் திரும்பிய லதாவுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று காலை வழக்கம் போல சத்யநாராயணன் வேலைக்குச் சென்றுவிட்டார். லதாவும், நிக்ஷிதாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது லதா, தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அப்போது அவரின் மகள், நிக்ஷிதா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இந்த உலகத்தில் தனக்குப்பிறகு மகளுக்கு யார் ஆதரவு என்று கருதிய லதா, இருவர் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றினார். பின்னர் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தீ வைத்தார். இதில் இருவரும் தீயில்கருகினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு லதா தீயில் கருகி இறந்து கிடந்தார். நிக்ஷிதா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

குடும்பத்தினருடன் லதா
குடும்பத்தினருடன் லதா

அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். ஆனால் 80% தீக்காயங்கள் ஏற்பட்டதால் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``குடும்பச் சூழல் மற்றும் மனவிரக்தி காரணமாகக் குழந்தையோடு லதா தீக்குளித்துள்ளார். லதா உயிரோடிருந்திருந்தால் குழந்தையைக் கொலை செய்த குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும். ஆனால் லதா இறந்துவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

ஒரு வயதுக் கைகுழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு