Published:Updated:

பிரதமருடன் போட்டோ; ஆர்மி ஐ.டி கார்டு! -சென்னை இன்ஜினீயரைப் பதறவைத்த QRcode

QRcode
QRcode

பழைய கட்டிலை 10,000 ரூபாய்க்கு விற்க இணையதளத்தில் பதிவு செய்த சென்னையைச் சேர்ந்த கப்பல் படை இன்ஜினீயர் பிரேம்ஆனந்தைத் தொடர்புகொண்ட மோசடி நபர், QRcode-ஐ அனுப்பி பணத்தைப் பறித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்துள்ளது. அந்தப் புகாரில் `வீட்டிலிருந்த பழைய கட்டிலை விற்க இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தேன். அதைப் பார்த்து என்னுடைய செல்போன் நம்பரில் தொடர்புகொண்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், கட்டிலை வாங்கிக்கொள்வதாகக் கூறினார். பின்னர், கட்டிலுக்கான பணத்தை ஆன்லைனில் அனுப்ப QRcode ஒன்றை வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பிவைத்தார்.

அதை முதல் தடவை ஸ்கேன் செய்தபோது கட்டிலை வாங்க விருப்பம் தெரிவித்தவர் அனுப்பிய 10 ரூபாய் என்னுடைய வங்கி அக்கவுன்ட்டுக்கு வந்தது. அதனால் நம்பிக்கையுடன் அடுத்தமுறை அந்த நபர் அனுப்பிய QRcode-ஐ ஸ்கேன் செய்தபோது என் வங்கியிலிருந்த பணம் அந்த நபரின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிட்டது. என்னை நூதனமாக ஏமாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார், கொரட்டூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த்.

வாட்ஸ்அப் சேட்டிங்
வாட்ஸ்அப் சேட்டிங்

புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் பிரபாகரன் மற்றும் போலீஸார் பிரேம் ஆனந்த்திடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்-லைன் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. QRcode மூலம் பணம் பரிவர்த்தனை நடந்துவருகிறது. மேலும் கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுக்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளதால் ஏராளமானவர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பிரேம்ஆனந்த்திடம் பணத்தை ஏமாற்றிய நபரின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் செயல்பட்டுவருகிறது. இந்தக் கும்பல், பழைய பொருள்கள், பைக்குகள், கார்களை விற்பதாக இணையதளத்தில் விளம்பரம் செய்பவர்களின் செல்போனில் முதலில் பேசுவார்கள். அப்போது தங்களை இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதைப் போல அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். அதை உறுதிப்படுத்த பிரதமர் மோடியிடமிருந்து விருது வாங்குவதைப் போன்ற புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைப்பார்கள். அதன்பிறகுதான் தங்களின் சுயரூபத்தைக் காட்டுவார்கள்.

அடையாள அட்டை
அடையாள அட்டை

புகார் கொடுத்த பிரேம் ஆனந்த், கப்பல்படையில் மூத்த பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். அவரின் வீட்டிலிருந்த பழைய கட்டிலை விற்க முடிவு செய்து பழைய பொருள்களை விற்கும் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன் விளம்பரம் செய்துள்ளார். அப்போது பழைய கட்டிலின் புகைப்படங்களையும், தன்னுடைய செல்போன் நம்பரையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து பிரேம் ஆனந்த்திடம் இந்தியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மஞ்சித் என்ற பெயரில் பேசியுள்ளார்.

`உஷார்.. மோசடியில் இது புதுசு’- ராணுவ வீரர்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கும்பல்!

பிரேம் ஆனந்த் கூறிய தொகைக்குக் கட்டிலை வாங்க சம்மதித்த மஞ்சித், பணத்தை QRcode மூலம் அனுப்புவதாகக் கூறியுள்ளார். அதன்படி 3 QRcode-களை அனுப்பியுள்ளார். அதை ஸ்கேன் செய்ததும் பிரேம் ஆனந்தின் வங்கிக் கணக்கிலிருந்து 50,000 ரூபாய் வரை எடுக்கப்பட்ட மெசேஜைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் QRcode-ஐ அனுப்பியவரின் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் எனப் பதில் வந்துள்ளது.

எனவே அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது. மேலும் இந்த மோசடிக் கும்பல் அனுப்பும் அடையாள அட்டை, பிரதமருடன் விருது வாங்கும் போட்டோ அனைத்தும் போலியானதாகத்தான் இருக்கும்" என்றனர்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

பிரேம் ஆனந்த்திடம் பேசினோம். ``வீட்டிலிருந்த கட்டிலை விற்க முடிவு செய்ததும் பிரபலமான பழைய பொருள்களை விற்கும் இணையதளத்தில் பதிவு செய்தேன். கட்டிலை வாங்குவதாக வடமாநிலத்திலிருந்து ஒருவர் என்னிடம் போனில் பேசினார். நான் கப்பல் படையில் பணியாற்றுவதாகக் கூறியதும் அவர் தன்னை இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகக் கூறினார். அதனால் அந்த நபரை முழுமையாக நம்பினேன். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் பணத்தைப் பெறலாம் என முடிவு செய்தேன்.

மிலிட்டரியில் QRcode மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும். அதனால்தான் அந்த நபர் அனுப்பிய QRcode-ஐ நம்பி ஸ்கேன் செய்தேன். அப்போது என் வங்கிக் கணக்கிலிருந்த 50,000 ரூபாயை அந்த நபர் எடுத்துவிட்டார். நான் ஏமாந்ததை உணர்ந்தபிறகு அந்த நபர் குறித்த தகவல்களைச் சேகரிக்க முடிவு செய்து அவரிடம் போனில் பேசி, என் நண்பர் ஒருவரின் வங்கி விவரங்களை அனுப்பி வைத்தேன்.

வாட்ஸ்அப் சேட்டிங்
வாட்ஸ்அப் சேட்டிங்

அப்போதும் அந்த நபர், மீண்டும் ஒரு QRcode-ஐ அனுப்பி வைத்தார். ஆனால் அதை என் நண்பர் ஸ்கேன் செய்யவில்லை. மஞ்சித் என்பவர்தான் தன்னுடைய ஆதார்கார்டு, ஐடி கார்டு, பிரதமர் மோடியிடம் விருது வாங்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தார். இந்தியன் ஆர்மி பிராடு மஞ்சித் என இணையதளத்தில் தேடினால் அவர் குறித்த விவரங்கள் வருகின்றன. பலர் ஏமாந்த தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். எனவே, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த மோசடிக் கும்பலைக் கைது செய்தால் மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்" என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு