Published:Updated:

`100 சிம்கார்டுகள்... எமோஷனல் அட்டாக்..!' - மாணவியை மனைவியாக்கிய சென்னை பேராசிரியர் மீது நர்ஸ் புகார்

எஸ்.மகேஷ்

சென்னை கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றிவருபவர் மீது நர்ஸ் பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரியலட்சுமி
பிரியலட்சுமி

சென்னை சாஸ்திரி நகரில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருப்பவர் பிரியலட்சுமி (41). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், "எனக்கும் திருமலை என்பவருக்கும் கடந்த 2.3.1998-ல் நீலாங்கரையில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 19 வயதில் மகள் உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு என்னையும் என் மகளையும் திருப்பதியில் தங்க வைத்தார். அங்கு என் மகள் படித்தார். இந்தச் சமயத்தில் திருமலை இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். எனது சொத்து, நகை மற்றும் உடமைகளை திருமலை அனுபவித்துவருகிறார்.

திருமலை
திருமலை

இந்தத் தகவல் கிடைத்ததும் திருமலையிடம் நியாயம் கேட்டபோது என்னையும் மகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரின் திருவான்மியூர் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். குடும்பச் செலவுக்கும் மகளின் படிப்புச் செலவுக்கும் திருமலை பணம் தராமல் அலைக்கழித்தார். பிறகு விவாகரத்துக்கு என்னை வற்புறுத்தினார். அதன்பேரில் விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. என் கணவரிடமிருந்து மாதாந்திர ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படியும் நானும் என் மகளும் தங்குவதற்கு ஒரு வீட்டைத் தரும்படியும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். திருமலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியலட்சுமியிடம் பேசினோம். "நான், நர்ஸாகப் பணியாற்றுகிறேன். திருவான்மியூரைச் சேர்ந்த திருமலை என்பவர், கோச்சிங் சென்டர் நடத்திவந்தார். அங்கு நான் சென்றபோதுதான் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரை முழுமையாக நம்பினேன். எங்களுக்குத் திருமணம் நடந்தது. மகளும் பிறந்தார்.

என்னையும் மகளையும் திருப்பதிக்கு அனுப்பி வைத்துவிட்டார். தற்போது அவர் திருமணம் செய்த பெண்ணும் அவரிடம் டியூஷன் படிக்க வந்த மாணவிதான். அந்த மாணவியிடமும் திருமலை பழகியபிறகு திருமணம் செய்துள்ளார். திருமலையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பச் சூழ்நிலை, எதிர்காலத்தைக் கருதி தகவல்களை வெளியில் சொல்லாமல் உள்ளனர். அதை அவர் தனக்குச் சாதகமாக்கியுள்ளார். இதுதவிர திருமலை மீது இன்னும் சிலர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர்.

பிரியலட்சுமி, திருமலை
பிரியலட்சுமி, திருமலை

திருமலை மீது நான், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அவர் என்னை தன்னுடைய மனைவி இல்லை என்று கூறினார். நான் திருமலையின் மனைவி என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும். அவரால் பாதிக்கப்பட்டவர்களை எமோஷனலாக அட்டாக் பண்ணுவார். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், நிறைய ஏ.டி.எம். கார்டுகள் உள்ளன.

நான் கொடுத்த புகார்களுக்கு சாட்சி இல்லை என்று அவர் தப்பிவருகிறார். இதனால்தான் ரோட்டிலிருந்து போராடுகிறேன். நான் அவரின் மனைவி என்று சொல்ல ஆதாரம் வேண்டும். என் மகளுக்கு அவர்தான் அப்பா என்பதற்கும் ஆதாரம் வேண்டும்" என்றவர் எமோஷலானார். பிறகு சிறிது நேர அமைதிக்குப்பிறகு, "எனக்கும் என் மகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு திருமலையும் அவரின் இரண்டாவது மனைவியும்தான் பொறுப்பு. திருமலை நடத்தும் டியூஷன் சென்டரில் நடப்பதை வெளியில் சொல்ல முடியாது" என்றார்.

திருமலையின் நண்பர் சிவக்குமார் பேசும் இரண்டு வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. அதில், "நான் கொடுத்த பணத்தை திருமலை எனக்குத் தரவில்லை. அதற்கு கடந்த 10 ஆண்டுகளாக வட்டி செலுத்திவருகிறேன். இதனால் மனஉளைச்சலில் உள்ளேன். திருமலையின் முழுவிவரம் எனக்குத் தெரியும். அரசியல் செல்வாக்கு, காவல்துறை செல்வாக்கு ஆகியவற்றை வைத்து மிரட்டிவருகிறார். எனவே, எனக்கு உயிர்பாதுகாப்பு வேண்டும்.

திருமலை நடத்தும் டியூஷன் சென்டரில் படித்த மாணவி, கர்ப்பம் அடைந்தார். அதுகுறித்து திருமலை என்னிடம் கூறினார். அந்த மாணவிக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்தது" என்று வீடியோவில் உள்ளது.

பிரியலட்சுமி, திருமலை
பிரியலட்சுமி, திருமலை

இதுகுறித்து திருமலையிடம் கேட்டபோது, "என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை பிரியலட்சுமி கூறியுள்ளார். கணவரை இழந்து பெண் குழந்தையுடன் தவித்த அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டினேன். பிரியலட்சுமியை நான் திருமணம் செய்யவில்லை. பிரியலட்சுமி மகளுக்கு நான் அப்பா இல்லை. டி.என்.ஏ பரிசோதனைக்கு நான் தயார். பிரியலட்சுமிக்குப் பின்னால் இருந்து சிலர் செயல்படுகின்றனர். பிரியலட்சுமி ஆதாரமாக கொடுக்கும் மகளின் பிறப்புச் சான்றிதழில் தந்தையாக என்னுடைய பெயர் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால், அதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மேலும், சில புகைப்படங்களை அவர் காட்டியுள்ளார். அந்தப் புகைப்படங்களில் பிரியலட்சுமிக்கு நான் தாலி கட்டும் போட்டோக்கள் இல்லை. இதனால் என்னுடைய சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில் பிரியலட்சுமி செயல்படுகிறார்" என்றார்.

கல்லூரி பேராசிரியர் திருமலை குறித்து விசாரித்தபோது சில தகவல்கள் நமக்குக் கிடைத்தன. ஆரம்பத்தில் திருவான்மியூரில் டியூஷன் சென்டரை தொடங்கினார். அப்போது அவர் சைக்கிளில்தான் அங்கு வருவார். திருமலைக்கும் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்மூலம்தான் திருமலை வளர்ச்சியடைந்தார். திருமலையின் டியூஷன் சென்டரில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தன. இதனால் அவருக்கு வருவாயும் அதிகரித்தது. சில ஆண்டுகளுக்கு முன்தான் அவருக்கு கல்லூரியில் வேலை கிடைத்தது. திருமலை, கணிதப் பாடத்தைக் கற்றுக் கொடுப்பதில் திறமையானவர். இதனால்தான் கணிதப் பாட டியூஷனுக்காக திருமலையிடம் மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதின. அவருக்குச் சொந்தமாக சில வீடுகளும் சொத்துகளும் உள்ளன. பேராசிரியராக பணியாற்றும் திருமலைக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும், திருமலையின் மனைவிக்கும் அவருக்கும் 20 வயதுக்கு மேல் வித்தியாசம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பிரியலட்சுமி, திருமலை
பிரியலட்சுமி, திருமலை

இந்த நிலையில், வீடியோவில் பேசும் திருமலையில் நண்பர் சிவக்குமார் நம்மிடம் பேசினார். "நான் போதையில் இருந்தபோது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. திருமலை என்னுடைய நண்பர். நான் சொல்லியது எல்லாம் பொய்" என்று கூறினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரியலட்சுமி கொடுத்த புகார், அடையாறு மகளிர் காவல் நிலையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.