Published:Updated:

` கை நிறைய பணம்; கவனிக்க ஆளில்லை!'- மகனின் நிலையால் விபரீத முடிவெடுத்த முன்னாள் அரசு ஊழியர்

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனைப் பார்த்துக்கொள்ள முடியாமல் விபரீத முடிவை எடுத்திருக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ஒருவர்.

Representational image
Representational image

சென்னை மக்கள், கெத்தாக காலரைத் தூக்கிக்கொண்டு, `நாங்க சென்னை வாசிடா...' என்று சொல்வதற்கு மெரினா, பலதரப்பட்ட மக்கள், அதிக வசதிகள் போன்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால், சென்னைக்கு இன்னொரு முகமும் உண்டு. அது மிகவும் மோசமானது, கொடூரமானது. பரபரப்பான வாழ்க்கையில் நிற்கக்கூட நேரம் இல்லாமல் பெரும்பாலான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பலர் என்னதான் கார், சொந்த வீடு என வசதியாக வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பக்கத்துவீட்டுக்காரரின் பெயர் கூட தெரியாது. உதவி எனக் கேட்டால் ஓடி வருபவர்கள் வெகு சிலரே.

முதியவர் - மாதிரி புகைப்படம்
முதியவர் - மாதிரி புகைப்படம்

இப்படிப்பட்ட சென்னையின் இன்னொரு முகத்தை வெளிக்காட்டும் சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். 82 வயதான இவர் மத்திய அரசின் சாஸ்திரி பவனில் டைப்பிஸ்ட்டாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். மனைவி மற்றும் மகன் என மூன்று பேரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரின் 44 வயது மகன் பிறவியிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். தன் மனைவி இருந்த வரை மகனை கவனித்து வந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டதால் அன்றிலிருந்து விஸ்வநாதனே தனியாக தன் மகனைக் கவனித்து வந்துள்ளார். அரசுப் பணியில் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.

`இருட்டில் ஒரு விளக்கு; திறந்தால் துர்நாற்றம்!' - சென்னை ஐஐடி பேராசிரியரின் 11 ஆண்டு  துயரக்கதை

இந்தநிலையில், தீபாவளிக்குப் பிறகு விஸ்வநாதன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார். அப்போதே அக்கம் பக்கத்தினருக்குச் சிறிய சந்தேகம் வந்துள்ளது. இருந்தும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் நேற்று விஸ்வநாதன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது கதவைத் திறக்க முயன்றால் உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால் பதறிய அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இறப்பு
இறப்பு

சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஸ்வநாதனின் மகன் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது. மகனுக்கு அருகிலேயே விஸ்வநாதனும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட காவலர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதன் பின்னர் நடந்த விசாரணையில் சோகமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

Vikatan

விஸ்வநாதன் விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறையினர், ``விஸ்வநாதனின் மகன் பிறவியிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த சில வருடங்களாக அவர்தான் மகனைக் கவனித்து வந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. தனிமை, மனைவியின் பிரிவு, மகனின் நிலை இவை அனைத்தையும் நினைத்து மன வேதனையிலிருந்துள்ளார். தனக்குப் பிறகு தன் மகனை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற பயம் அவரை வாட்டியுள்ளது. இதனால் கடைக்குச் சென்று நிறைய தூக்க மாத்திரைகள் வாங்கிவந்து, அதை உணவில் கலந்து, தன் மகனுக்குக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டதாகத் தெரிகிறது.

மாத்திரை - மாதிரி புகைப்படம்
மாத்திரை - மாதிரி புகைப்படம்

இதன்காரணமாக மகன் உயிரிழந்திருக்கலாம் எனப் போலீஸார் கருதுகின்றனர். மாத்திரை சாப்பிட்டு நான்கு நாள்கள் ஆன நிலையில், உயிருக்குப் போராடிய நிலையில் மகன் அருகிலேயே மயக்கமடைந்துவிட்டார். மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். விஸ்வநாதனின் உறவினர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.