Published:Updated:

சென்னை: நிஜத்தில் நடந்த சதுரங்க வேட்டை - புகைப்படக் கலைஞர் கடத்தலில் அம்பலமான இரிடியம் மோசடி!

சினிமாத்துறை புகைப்படக் கலைஞர் கடத்தப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. இரிடியம் மோசடியில் தொடர்புடைய புகைப்படக் கலைஞரை, பணம் கொடுத்தவர்களே கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சென்னை, சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் குடியிருப்பவர் நியூட்டன் (44). இவர் கடந்த 19-ம் தேதி காலை நண்பர் ஆடிட்டர் ரகுஜி என்பவரைச் சந்திக்கச் செல்வதாக மனைவி கௌசல்யாவிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் கௌசல்யா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்தனர்.

கைதான திலீப்
கைதான திலீப்

இந்நிலையில் கௌசல்யா அப்பாவின் செல்போன் நம்பரில் தொடர்புகொண்ட நியூட்டன் என்பவர், தானும் ஆடிட்டர் ரகுஜியும் 30 லட்ச ரூபாய்க்காகக் கடத்தப்பட்டிருப்பதாகவும், பணத்தைத் தயார் செய்யும்படியும், இல்லையென்றால் தங்களைக் கடத்தல்காரர்கள் கொலை செய்துவிடுவதாகவும் கூறினார். இந்தத் தகவலை விருகம்பாக்கம் போலீஸாரிடம் கௌசல்யா தெரிவித்தார்.

Vikatan

நியூட்டன் கடத்தப்பட்ட தகவலையடுத்து அவரை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அசோக் நகர் உதவி கமிஷனர் பிராங்கிளின் டி ரூபன் தலைமையில் விருகம்பாக்கம் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தி.நகர் சைபர் க்ரைம் போலீஸார் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் நம்பர் சிக்னல் அடிப்படையில் விசாரணை நடத்தினர். கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த திலீப் (28), வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் (39), திருத்தணியைச் சேர்ந்த சுனில்குமார் (31), அரக்கோணத்தைச் சேர்ந்த கௌதம் (25), திருத்தணியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (22), கொளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (33) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். நியூட்டன், அவரின் நண்பர் ரகுஜி ஆகியோரை போலீஸார் மீட்டனர். கடத்தல் கும்பலிடமிருந்து ஒரு கார், இரண்டு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சுனில்
சுனில்

கடத்தல் கும்பலிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கடத்தப்பட்ட நியூட்டன், சினிமாத்துறையில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிவருகிறார். இவர் இரிடியம் (ரைஸ் புல்லிங்) தருவதாகக் கூறி சதீஷ்குமாரிடம் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கி ஏமாற்றியிருக்கிறார். அதனால், ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நியூட்டனையும் ரகுஜியையும் கடத்தி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். இரிடியம் மோசடியில் நியூட்டன் சிக்கியிருப்பதால் அவரிடமும் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி என்பதைத் தனிப்படை போலீஸார் நம்மிடம் விரிவாக விவரித்தனர். ``புகைப்படக் கலைஞர் நியூட்டன், ஆயிரம் விளக்கு பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். கொரோனா காலகட்டத்தில் அந்த ஸ்டூடியோவை மூடிவிட்டார். பின்னர் புராதனப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் நியூட்டன் ஈடுபட்டார். இதற்காக திருமுல்லைவாயல் பகுதியில் அலுவலகம் ஒன்றை அவர் நடத்திவந்தார். அப்போது பெங்களூரைச் சேர்ந்த மேத்யூ என்பவர் நியூட்டனுக்கு அறிமுகமானார்.

கௌதம்
கௌதம்

இருவரும் குறுகியகாலத்தில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். அதன்படி இரிடியம் மோசடியில் ஈடுபடத் தொடங்கினர். மோசடி செய்த பணத்துடன் மேத்யூ தலைமறைவாகிவிட்டார். பணம் கொடுத்தவர்கள் நியூட்டனிடம் பணத்தைக் கேட்டு நச்சரித்து வந்திருக்கின்றனர். நியூட்டனிடம் பணத்தைக் கொடுத்த சதீஷ்குமார், நியூட்டனையும், அவரின் நண்பர் ரகுஜியையும் காரில் கடத்தினர்.

ராமநாதபுரம்:  `ரூ.6 கோடி; 40 நாள்களில் இரு மடங்கு!’ - இரிடியம் மோசடியில் ஏமாந்த கரூர் நபர்

பின்னர், நியூட்டனின் மாமனாரிடம் பணம் கேட்டு மிரட்டினர். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்ததும் நியூட்டனின் மாமனாரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அவரைப் பின்தொடர்ந்தோம். வழக்கம்போல கடத்தல் கும்பல் பல இடங்களைக் கூறிவிட்டு இறுதியாக பட்டாபிராம் பகுதிக்கு வரச் சொன்னது. அதன்படி நியூட்டனின் மாமனாரைப் பின்தொடர்ந்து மஃப்டி போலீஸார் அங்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கௌதம் என்பவரைப் பிடித்தோம். அவர் அளித்த தகவலின்படி சுனிலைத் தேடினோம். அதற்காக சுனிலின் குடும்பத்தினரை எங்களின் கஸ்டடிக்குக் கொண்டு வந்தோம்.

சதீஷ்
சதீஷ்

உடனடியாக திருப்பதியிலிருந்த சுனில், சென்னை வந்து எங்களிடம் சரணடைந்தார். இதற்கிடையில் நியூட்டனையும் ரகுஜியையும் காரில் கடத்திய கும்பல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சுற்றித்திரிவது எங்களுக்குத் தெரியவந்தது. அந்த காரை மடக்கி நியூட்டனனையும் ரகுஜியையும் மீட்டோம். நியூட்டன், தலைமறைவாக இருக்கும் மேத்யூவிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

`சதுரங்க வேட்டை’ படத்தில் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும் என காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதைப்போல நியூட்டனை பெங்களூருவைச் சேர்ந்த மேத்யூ, குறுகியகாலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசையைத் தூண்டியிருக்கிறார். மேத்யூ கூறியதைப்போல நியூட்டனும் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு சிக்கலில் சிக்கியிருக்கிறார் என்கின்றனர் போலீஸார்.

நிஜத்தில் நடந்த சதுரங்க வேட்டை சினிமா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு