Published:Updated:

சென்னை: செயின் பறிப்பில் ஈடுப்பட்ட இன்ஜினியர் - சிறை நண்பர்கள் சிக்கிய கதை!

 செயின் பறிப்பு
செயின் பறிப்பு

தனியாக நடந்துச் செல்லும் பெண்களை குறி வைத்து சிறை நண்பர்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சென்னை அம்பத்தூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் விஜி. இவர் கடந்த 15-ம் தேதி அயப்பாக்கம் அருகே நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் விஜியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த 4,200 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியிருக்கின்றனர். இதுதொடர்பாக விஜி, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

 செயின் பறிப்பு
செயின் பறிப்பு

அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கனகராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வரும் இளைஞர்கள் இருவர் செயின் பறிப்பில் ஈடுபடுவது தெரிந்தது.

சென்னை: ஒரே பைக், கூடவே பயணம்; நண்பனிடம் ஆள்வைத்து செயின் பறிப்பு! - கூட்டாளிகளுடன் சிக்கிய பின்னணி

இதையடுத்து பைக்கின் பதிவு நம்பரை வைத்து போலீஸார் விசாரித்தபோது அது திருட்டு வண்டி எனத் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகும் போலீஸார் சிசிடிவி மூலம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பின்தொடர்ந்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில் விஜியிடம் பணம் பறித்தது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த டேனியல் என்கிற தமிழரசன் (31) மற்றும் அவரது கூட்டாளியான திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (29) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மணிகண்டன்
மணிகண்டன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான டேனியல், மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து அம்பத்தூர், திருமுல்லைவாயல், மாங்காடு ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து இவர்கள் கைவரிசை காட்டியிருக்கின்றனர். சிசிடிவியில் முகம் தெரியாமலிருக்க இருவரும் முன்எச்சரிக்கையாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்றிருக்கின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் திருட்டு வழக்கில் கைதாகி திருத்தணி கிளை சிறையில் சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அப்போதுதான் இருவரும் அறிமுகமாகியிருக்கின்றனர். பின்னர் சிறையிலிருந்து வெளியில் வந்த இருவரும் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்திருக்கின்றனர்.

சிசிடிவி
சிசிடிவி

டேனியல், சிவில் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். மணிகண்டன் பி.காம் படித்திருக்கிறார். கொள்ளை வழக்கில் சிக்கிய டேனியலின் வாழ்க்கை திசைமாறிவிட்டது. அதைப்போல பைக் திருட்டில் கைதான மணிகண்டன், தற்போது செயின் பறிப்பு வழக்கிலும் சிக்கியிருக்கிறார். இவர்களிடமிருந்து 39 சவரன் தங்க நகைகள், கத்தி, இரண்டு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு