Published:Updated:

சென்னை: மாடியில் தாய் கொலை - 2 நாள்கள் சகஜமாக வாழ்ந்த நீதிமன்ற ஊழியர்!

கொலை
கொலை

சென்னை கோயம்பேடு பகுதியில் தாயை இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்த வழக்கில் மகனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆதியம்மாள் (65). இவரின் கணவர் ஆறுமுகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆதியம்மாளின் மகன்கள், மகள்கள் என அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் அனைவரும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வசித்துவருகின்றனர்.

கொலை
கொலை
representational image

இவர்களில் ஆதியம்மாளின் மகன் மகேஷ்குமாருக்கு (40) தந்தையின் வேலை, வாரிசு அடிப்படையில் கிடைத்தது. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மகேஷ்குமார் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். ஆனால், சில மாதங்களாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. இந்தநிலையில், மகேஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதனால், மகேஷ்குமார் மட்டும் கோயம்பேடு நெற்குன்றத்தில் தனியாகத் தாயாருடன் குடியிருந்துவந்தார்.

வீட்டின் கீழ்த்தளத்தில் மகேஷ்குமாரும், மாடியிலுள்ள குடிசை வீட்டில் ஆதியம்மாளும் தங்கியிருந்தனர். நிவர் புயலால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாள்களாக ஆதியம்மாள் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஆதியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். ஆதியம்மாள் இறந்துகிடந்த நிலையில், மகேஷ்குமார் எதையும் கண்டுகொள்ளாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார்.

சென்னை: 3 பேர் கொலை - துப்பாக்கி கொடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி!
நீதித்துறை
நீதித்துறை
representational image

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஆதியம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் இரும்பு பைப்பால் தலையில் தாக்கப்பட்டு ஆதியம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மனைவி, குழந்தைகள் பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்துவந்த மகேஷ்குமார், அடிக்கடி அவரின் அம்மா ஆதியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுவந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் ஆதியம்மாளுக்கும் மகேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமார், பெற்ற தாய் என்றுகூடப் பார்க்காமல் ஆதியம்மாளை தலையில் அடித்துவிட்டு கீழே இறங்கிவந்திருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆதியம்மாள் இறந்துவிட்டார். அதனால் மகேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு