அள்ளிக்கொடுத்த புதுமாப்பிள்ளை; அதிர்ச்சியில் மணமகள் - திருமணம் முடிந்த 3 வது நாளில் சிறையில் கணவன்!
சென்னையில் திருமணம் முடிந்து 3 வது நாளில் சிறைக்குச் சென்ற புதுமாப்பிள்ளை குறித்த தகவலைக் கேட்டு மணமகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

சென்னை பம்மல், தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துபாண்டியன் ஐசக். இவரின் மனைவி டோரா ஐசக். இவர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் கடந்த 8.9.2019-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் மகன்கள், மருமகள்கள், பேரன்கள் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய கணவர் 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். நான் என் மகன்களுடன் சேர்ந்து என் கணவர் நடத்திவந்த ஃபைனான்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறேன். நாங்கள் குடும்பத்தோடு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் பம்மலில் உள்ள சர்ச்சுக்குச் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 8.9.2019-ல் பம்மல் மெயின் ரோட்டில் சர்ச்சுக்குச் சென்றோம். பிறகு, முற்பகல் 11 மணியளவில் வீட்டுக்கு வந்தோம். என்னுடைய அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதில் வைத்திருந்த தங்க நகைகள் சுமார் 50 சவரன் மற்றும் லட்சக்கணக்கில் கொள்ளைபோயிருந்தது.

வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொள்ளையன் உள்ளே நுழைந்துள்ளான். எனவே, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின்பேரில் சங்கர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை போலீஸார் தேடிவந்தனர். சங்கர்நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பயிற்சிக்காகச் சென்றுவிட்டதால் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத் இந்த வழக்கை துரிதமாக விசாரித்தார்.
இந்தநிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் ராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜான்போஸ்கோவை போலீஸார் கைது செய்து நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆரோக்கிய ஜான் போஸ்கோவை பிடித்த கதையை நம்மிடம் விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்,
``கொள்ளை நடந்த வீடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை முதலில் ஆய்வு செய்தோம். அப்போது கொள்ளை நடந்த நேரத்தில் பைக்கில் ஒருவர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் அந்த வாகனத்தின் பதிவு நம்பரை வைத்து விசாரித்தபோது அது போலி என்று தெரியவந்தது. போலீஸாரின் முதல்கட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் சோர்ந்து போகாமல் கொள்ளையனைப் பிடிக்க வியூகம் அமைக்கப்பட்டது.

சிசிடிவியில் பதிவாகிய நபரின் போட்டோவை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரித்தோம். அப்போதுதான் திருமங்கலம் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய ஒருவரின் போட்டோவோடு அந்தப்புகைப்படம் ஒத்துப்போனது. இதனால், அந்த நபர் குறித்த விவரங்களை சேகரித்தோம். அவரின் பெயர் ஆரோக்கிய ஜான்போஸ்கோ, முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் என்று தெரிந்தது. சென்னையில் தங்கியிருந்த ஆரோக்கிய ஜான்போஸ்கோ, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது திருச்சி, பல்லடம், இளையான்குடி, புதுக்கோட்டை, திருமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள் உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆரோக்கிய ஜான்போஸ்கோவுக்கும் சென்னை அண்ணாசாலை, எல்.ஐ.சி. அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. புதுமாப்பிள்ளை ஆரோக்கிய ஜான்போஸ்கோ, மாமியார் வீட்டில் இருந்தபோது அவரைப் பிடித்தோம். அவரிடம் முதலில் விசாரித்தபோது கொள்ளை சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால், எங்களின் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஆரோக்கிய ஜான்போஸ்கோ ஒப்புக்கொண்டார்.

கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணை காதலித்த ஆரோக்கிய ஜான்போஸ்கோ, திருடிய பணம், நகைகளைக் கொண்டு திருமணம் செய்துள்ளார். தன்னுடைய காதலியும் மனைவியுமான அந்தப் பெண்ணுக்கு 10 சவரனில் தங்கச் செயின், வைர நெக்லஸ், 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெசின், பிரிட்ஜ் என வாங்கிக் கொடுத்துள்ளார். வழக்கமாக மாப்பிள்ளைக்குதான் பெண் வீட்டில் வரதட்சணை கொடுக்கப்படும். ஆனால், ஆரோக்கிய ஜான்போஸ்கோ, பெண் வீட்டினருக்கு பணம் நகை, பொருள்களை அள்ளிக் கொடுத்து அசத்தியுள்ளார். திருமணம் முடிந்த 3வது நாளில் கணவன், திருடன் என்பது தெரிந்ததும் மணமகள் அதிர்ச்சியடைந்தார். தான் அணிந்திருந்த நகைகளை கண்ணீர்மல்க போலீஸாரிடம் கழற்றிக் கொடுத்தார் . ஆரோக்கிய ஜான்போஸ்கோவிடமிருந்து 40 சவரன் நகை, 19 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.
எந்தவித தடயமும் துப்பும் இல்லாமல் கொள்ளை வழக்கை சிறப்பாகத் துப்பு துலக்கிய உதவி கமிஷனர் தேவராஜ், இன்ஸ்பெக்டர் முகமது பரகக்த் மற்றும் தனிப்படை போலீஸாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.
திருமணம் முடிந்த கையோடு சிறைகம்பிகளை புதுமாப்பிள்ளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.