Published:Updated:

பேருந்தின் கூரையில் ஒரு கால்; ஜன்னலில் இன்னொரு கால்!- சென்னை பயணிகளை அதிரவைத்த மாணவர்களின் அராஜகம்

சென்னை அண்ணாசாலையில் சென்ற மாநகரப் பேருந்தில் படியில் பயணித்த 2 மாணவர்கள் திடீரென ஜன்னல் வழியாக மேற்கூரைக்கு ஏறி சாகசம் செய்தார். அதை வீடியோ அடிப்படையில் 2 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பேருந்தில் சாகசம் செய்யும் மாணவர்கள்
பேருந்தில் சாகசம் செய்யும் மாணவர்கள்

சென்னை அண்ணாசாலை வழியாகச் சென்ற மாநகரப் பேருந்தில் பயணித்த மாணவர்கள், படியில் தொங்கியபடி கானா பாடல்களைப் பாடினர். அதனால் உற்சாகமடைந்த சில மாணவர்கள், படியில் நின்றபடி தங்களின் திறமைகளை சாகசமாகச் செய்தனர். ஓடும் பேருந்தில் படியிலிருந்து ஜன்னல் வழியாக ஏறிய மாணவன், ஒரு காலை ஜன்னலிலும் இன்னொரு காலை பேருந்தின் மேற்கூரையிலும் வைத்தபடி பயணித்தார். அந்த மாணவனை சக மாணவர்கள் ஜே, ஜே எனக் கோஷமிட்டனர்.

பேருந்தில் மாணவனின் சாகசப்பயணம்
பேருந்தில் மாணவனின் சாகசப்பயணம்

மாணவர்களின் இத்தகைய செயல்கள் பேருந்தில் பயணித்தவர்களுக்கு பல்வேறு சிரமங்களைக் கொடுத்தது. அந்த நேரத்தில் அண்ணாசாலையில் சென்றவர்கள், மாணவர்களின் சாகசங்களை தங்களின் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். டூவிலரில் சென்றவர்கள், பேருந்தை பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர். மாணவர்களின் சாகச பயணம் குறித்த தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்ததும் போலீஸார் அந்தப் பேருந்தை பின்தொடர்ந்தனர்.

பேருந்தில் சாகசம் செய்த இரண்டு மாணவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் சென்னை புதுக்கல்லூரியில் பயிலும் பி.சி.ஏ 2-ம் ஆண்டு பயிலும் மீர் ரெசூதீன் என்றும் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கும் ரகுமான் என்றும் தெரிந்தது. அவர்கள் இருவர் மீதும் திருவல்லிக்கேணி போலீஸார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர்.

பேருந்தில் சாகசம்
பேருந்தில் சாகசம்

வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மாணவர்களின் சாகச வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், மாணவர்கள் இருவரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மந்தவெளியிலிருந்து பிராட்வே செல்லும் வழித்தடம் 21-ல் பயணித்த மாணவர்கள் பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு செய்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் 2 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சென்னையைப் பொறுத்தவரை மாநகரப் பேருந்தில் குறிப்பிட்ட சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ரூட் தல, பஸ் டே எனக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ரூட் தல பிரச்னை வன்முறையாக மாறியதையடுத்து காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் கடும் நடவடிக்கை மேற்கொண்டது. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. சில மாதங்கள் அமைதியாக இருந்த மாணவர்கள் நேற்று மீண்டும் சாகசங்களை பேருந்தில் செய்யத்தொடங்கியுள்ளனர்" என்றனர்.