Published:Updated:

16 தங்ககாசுகள், 20 கம்மல்கள், 16 வளையல்கள்,13 நெக்லஸ்கள்!- வங்கி அதிகாரியைப் பதற வைத்த டிரைவர்கள்

சென்னை வங்கி அதிகாரி வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனது. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் விவரங்களை லிஸ்ட் போட்டு புகார் கொடுத்துள்ளார்.

வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை போன நகைகளின் பட்டியல்
வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை போன நகைகளின் பட்டியல்

சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருபவர் விஸ்வநாதன். இவர் வங்கி ஒன்றில் துணைத் தலைவராக உள்ளார். இவரின் மனைவி ரமோனா. இவரின் மகள் சம்யுக்தா. இவர், வெளிநாட்டில் படித்துவருகிறார். வீட்டில் விஸ்வநாதனும் ரமோனாவும் குடியிருந்து வருகின்றனர்.

கடந்த 5-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலி சுலேரிகாடு என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு விஸ்வநாதன் மனைவியோடு சென்றுள்ளார். பிறகு 6-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் படுக்கையறையில் உள்ள அலமாரிகளின் கண்ணாடிகள் உடைந்து காணப்பட்டன. மேலும், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போயிருந்தன.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

இதுகுறித்து விஸ்வநாதன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் கொள்ளை போன பொருள்களின் விவரங்களைப் பட்டியலிட்டிருந்தார். அதில், 9 மோதிரங்கள், 16 தங்கக் காசுகள், 50 கிராம் எடையுள்ள கோல்டு பிஸ்கட், 2 கைச்செயின்கள், 20 கம்மல்கள், 12 வளையல்கள், கல் வைத்த நெக்லஸ் 6 (சிறியது), கல் வைக்காத நெக்லஸ் 5 (சிறியது), பெரிய நெக்லஸ் 2, செயின்கள் 2, வெள்ளி நாணயங்கள் 3, வெள்ளி டம்ளர், டபரா, 3 குத்துவிளக்குகள் மற்றும் சில நகைகள் திருட்டுப் போனதாக குறிப்பிட்டிருந்தார். மொத்தம் 116 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாகக் கணக்கிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கூடுதல் கமி‌ஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார், விஸ்வநாதனிடம் சென்று முதலில் விசாரித்தனர். அப்போது அவர், சம்பவத்தன்று குடும்பத்துடன் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், வீட்டில் சாவியை பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார். இதையடுத்து, பணிப்பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், சாவியை வழக்கம்போல வைத்திருக்கும் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறினார்.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

இதையடுத்து, போலீஸார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் ஒருவரிடம் டிரைவராக வேலைபார்க்கும் சந்தனராஜ் என்பவர் நள்ளிரவில் அங்கு வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து, டாக்டரிடம் டிரைவர் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், டிரைவர் 3 நாள்கள் விடுமுறையில் இருக்கும் தகவலைத் தெரிவித்தார்.

விடுமுறை எடுத்த சந்தனராஜ் ஏன் நள்ளிரவில் அங்கு வந்தார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் நண்பருடன் சந்தனராஜ் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். ஆனால், அவர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்துக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் டிரைவரைப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட டிரைவர்கள் அரவிந்த், சந்தனராஜ்
கைது செய்யப்பட்ட டிரைவர்கள் அரவிந்த், சந்தனராஜ்

இதையடுத்து, அவரை சென்னைக்கு போலீஸார் அழைத்துவந்தனர். அப்போது அவர், கொள்ளையடித்த நகைகளை நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த அறையில் வைத்திருப்பதாகக் கூறினார். அங்கு சென்ற போலீஸார் 116 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கொள்ளை தொடர்பாக டிரைவர் சந்தனராஜ் மற்றும் அவரின் நண்பர் அரவிந்தன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், ``கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தனராஜ் மற்றும் அவரின் நண்பர் அரவிந்தன் ஆகிய இருவரும் டிரைவர்கள். அரவிந்தன், சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் ஒருவரிடம் டிரைவராகப் பணியாற்றுகிறார். வங்கி அதிகாரி விஸ்வநாதன், வசதியாக வாழ்வதைக் கவனித்த சந்தனராஜ், அவரின் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தார். மேலும் விஸ்வநாதன் வீட்டின் சாவியை வழக்கமாக ஒரு பெட்டியில் போட்டு வைப்பதையும் சந்தனராஜ் நீண்ட காலமாக நோட்டமிட்டு வந்தார்.

`போலீஸ் என்னை பலிகடாவாக்கப் பார்க்கின்றனர்!’ - லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷ்

சம்பவத்தன்று நண்பர் அரவிந்தனுடன் சேர்ந்து பெட்டியிலிருந்து சாவியை எடுத்த சந்தனராஜ், கதவைத் திறந்துள்ளார். பிறகு லாக்கரிலிருந்த 116 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த நகைகளுடன் ஊருக்குச் சென்றால் சிக்கல் எனக் கருதிய சந்தனராஜ், அதை சென்னையிலேயே வைத்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.

சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் சிக்னல் மூலம் சந்தனராஜ் மற்றும் அவரின் நண்பர் அரவிந்தன் ஆகியோரைக் கைது செய்துவிட்டோம். வீட்டில் நகை, பணத்தை வைத்திருப்பவர்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். வீட்டில் சாவியை அஜாக்கிரதையாக வைத்திருந்ததால்தான் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது" என்றார்.

கொள்ளை நடந்த 6 நாள்களுக்குள் கொள்ளையர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.