Published:Updated:

`சியா' இருக்கு, `கோர்' கொண்டு வா!' - சென்னையில் நடந்த சீக்ரெட் கோட்வேர்டு பிசினஸ்

சென்னையில் சீக்ரெட் பிசினஸ் நடந்துவருகிறது. அந்த நெட்வொர்க் கும்பலை திருமங்கலம் போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னையில் சிக்கிய கஞ்சா
சென்னையில் சிக்கிய கஞ்சா

சென்னையில் கஞ்சா விற்பனை சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. கஞ்சா விற்பனையைத் தடுக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சென்னை மாநகர போலீஸார் கஞ்சா விற்பனையைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். இந்தநிலையில் சென்னை பாடி பாலத்தின் அருகே திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், நாராயணன் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸாரைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

கைதான கஞ்சா கும்பல்
கைதான கஞ்சா கும்பல்

மேலும், அந்த வாலிபரிடம் நடத்திய சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் கணேஷ் (28) என்றும் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர், சென்னை அண்ணாநகர் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரின் வீட்டில் போலீஸார் சோதனை செய்தபோது அங்கு 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கணேஷிடம் விசாரித்தபோது அவர் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அளித்த தகவலின்பேரில் கஞ்சா விற்கும் நெட்வொர்க்கைப் போலீஸார் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``வாகனச் சோதனையில் சிக்கிய கணேஷிடம் விசாரித்தபோது அவர், கடந்த ஓராண்டாக சென்னையில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இவர், 500 ரூபாய், 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என மொத்தமாக கஞ்சாவை சப்ளை செய்வார். கணேஷிடமிருந்து கஞ்சாவை வாங்குபவர்கள் அதை சிறிய பொட்டலங்களாகப் போட்டு மாணவர்கள், கூலித் தொழிலாளர்களுக்கு விற்பதும் தெரியவந்தது.

கணேஷ், முகமது ரியாஸ்
கணேஷ், முகமது ரியாஸ்

கணேஷுக்கு மண்ணடியைச் சேர்ந்த ஒருவர்தான் கஞ்சா சப்ளை செய்து வந்திருக்கிறார். இதனால் அவரைப் பிடிக்க வியூகம் அமைத்தோம். ` 60,000 ரூபாய்க்கு கஞ்சா வேண்டும்' என போனில் ஆர்டர் கொடுத்தார் கணேஷ். அதன்படி கஞ்சாவை கொண்டு வந்த நபரை மடக்கினோம். அவரின் பெயர் முகமது ரியாஸ் (21), இவர் சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர். முகமது ரியாஸ், கஞ்சா டெலிவரி வேலைபார்த்துவருகிறார். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம்.

மண்ணடியைச் சேர்ந்த கஞ்சா சப்ளை செய்யும் நபர், தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடிவருகிறோம். கணேஷ் 6-ம் வகுப்பு படித்துள்ளார். ரியாஸ் 9-ம் வகுப்பு படித்துள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை 24,000 ரூபாய்க்கு வாங்கும் கணேஷ், அதை 50,000 ரூபாய்க்கு விற்றுவந்துள்ளார். அதிக லாபம் என்பதால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவந்ததாகத் விசாரணையின்போது தெரிவித்தார். இதனால் அவரை `கஞ்சா கணேஷ்' என்றுதான் அந்த நெட்வொர்க்கில் அழைத்துவருகின்றனர்.

 பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

எங்களுடைய விசாரணையில், அவருக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா சப்ளை செய்யப்படும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் கஞ்சா விற்கும் கும்பலைக் கூண்டோடு கைது செய்ய திட்டமிட்டுள்ளோம். இவர்களிடமிருந்து 2 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

இந்தக் கும்பல் கஞ்சாவை சீக்ரெட் கோட்வேர்டு மூலம் விற்பது விசாரணையில் தெரியவந்தது. பணத்தை இவர்கள் `சியா' என்றும் கஞ்சாவை `கோர்' என்றும் கூறுகின்றனர். கணேஷ் நெல்லையைச் சேர்ந்தவர் என்பதால் மண்ணடியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியிடம் `ஏலே மாப்ளே 60,000 சியா வைத்திருக்கிறேன், கோர் கொண்டு வா' என்று போனில் ஆர்டர் கொடுத்துள்ளார்.

கஞ்சா தகராறில் கழுத்தில் விழுந்த கத்திக்குத்து!? - நள்ளிரவில் ஆவடி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

மேலும், இந்தக் கும்பலிடம் வாடிக்கையாகக் கஞ்சா வாங்குபவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்துவருகின்றனர். விரைவில் அவர்களையும் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.