Published:Updated:

`2 வருடமாகத் திருடப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம்!' -சென்னை சகோதரிகளின் `திருட்டு டெக்னிக்'

திருட்டு வழக்கில் கைதான ஷாலினி
திருட்டு வழக்கில் கைதான ஷாலினி

வசதிக்குக் குறைவில்லாத அந்தப் பங்களா வீட்டில் 2 ஆண்டுகளாக வேலை செய்துவந்த அக்கா, தங்கை ஆகியோர் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கம், பணம் ஆகியவற்றைத் திருடியதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை, எழும்பூர், சுலைமான் சக்ரியா அவென்யூ, காசா மேஜர் சாலையில் உள்ள பங்களா வீட்டில் குடியிருப்பவர் பிரபல டாக்டர் கோகுல்தாஸ் (84). இந்த வீட்டில் கோகுல்தாஸும் அவரின் மனைவியும் மட்டுமே தங்கியிருந்தனர். கோகுல்தாஸின் மகன் கல்யாண்குமார் (40). தொழிலதிபரான இவர், குடும்பத்தோடு எழும்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருகிறார்.

இந்தநிலையில் 6,00,000 ரூபாயை பீரோவில் வைத்துக் கல்யாண்குமார் பூட்டி வைத்துள்ளார். சில நாள்களுக்குப் பிறகு அவர் பீரோவைத் திறந்து பார்த்தபோது ரூபாய் நோட்டுகள் மாயமாகியிருந்தன. இதுகுறித்து அப்பாவிடமும் அம்மாவிடமும் கல்யாண்குமார் விசாரித்துள்ளார். அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.

`சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!'- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளை
மீட்கப்பட்ட தங்க நகைகள்
மீட்கப்பட்ட தங்க நகைகள்

இதனால், பீரோவிலிருந்த குடும்ப நகைகளைக் கல்யாண்குமார் சரிபார்த்துள்ளார். அப்போது அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. இதையடுத்துக் கல்யாண்குமார், எழும்பூர் காவல் நிலையத்தில் கடந்த 14.9.2019-ல் புகார் கொடுத்தார். அதன்பேரில் எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், தமிழ்ச்செல்வி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ், காவலர் சந்திரசேகர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கல்யாண்குமாரின் பெற்றோரிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள், சில மாதங்களாக பகல் நேரத்தில் அயர்ந்து தூங்குவதாகக் கூறியுள்ளனர். முதுமை காரணமாக அவர்கள் தூங்கியிருக்கலாம் எனப் போலீஸார் முதலில் கருதினர். இந்த வழக்கில் பீரோவின் பூட்டு உடைக்கப்படாமல் திருட்டு நடந்துள்ளதால் கோகுல்தாஸ் வீட்டில் வேலைசெய்பவர்கள் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது.

ஒவ்வொருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ்.நகர் முதல் தெருவைச் சேர்ந்த லோகநாயகி (48), அவரின் தங்கை ஷாலினி (34) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.

லோகநாயகி
லோகநாயகி

போலீஸாரின் விசாரணையில் லோகநாயகியும் ஷாலினியும் டாக்டர் கோகுல்தாஸ் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவரும் சேர்ந்து கோகுல்தாஸ் மற்றும் அவரின் மனைவிக்கு பகலில் தூக்க மாத்திரையை பொடியாக்கி உணவில் கலந்து கொடுத்துள்ளனர். பின்னர், இருவரும் தூங்கிய பிறகு கள்ளச்சாவி மூலம் பீரோவைத் திறந்து போட்டிபோட்டி நகை, பணத்தைத் திருடியுள்ளனர். இவர்கள் இருவரிடமிருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும் 8 தங்க பிஸ்கட்கள், லட்சக்கணக்கில் பணம், சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகத் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பெற்றோருடன் குடியிருந்த கல்யாண்குமார், சில ஆண்டுகளுக்கு முன் தனியாகச் சென்றுவிட்டார். இதனால், தன்னுடைய வயதான பெற்றோரைக் கவனிக்க வீட்டில் பணிப்பெண்களை அமர்த்திருந்தார். அதில் லோகநாயகியும் ஷாலினியும் அக்கா தங்கை என்பதால் மற்ற வேலையாள்களுக்குத் தெரியாமல் கூட்டு சேர்ந்து நகை, பணத்தைத் திருடிவந்துள்ளனர்.

எழும்பூர் காவல் நிலையம்
எழும்பூர் காவல் நிலையம்

கல்யாண்குமார், சமீபத்தில் பீரோவில் வைத்திருந்த 6,00,000 ரூபாயில் 4,00,000 ரூபாயை லோகநாயகியும் 2,00,000 ரூபாயை ஷாலினியும் திருடியுள்ளனர். இவர்கள் தங்களின் சேலைக்குள் மறைத்து வைத்து நகை, பணத்தைத் திருடிவந்துள்ளனர். திருடிய பணத்தில் லோகநாயகியும் ஷாலினியும் ஆடம்பரமாக வாழ்ந்துவந்துள்ளனர். இன்னும் சில நகைகளை மீட்க வேண்டியதுள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றார்.

வீட்டு வேலை செய்துவரும் லோகநாயகி, ஷாலினி ஆகியோர் எப்படி ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்ற கேள்வி அவர்களின் வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு நீண்டகாலமாக இருந்துவந்துள்ளது. அந்தக் கேள்விக்கான பதில் லோகநாயகி, ஷாலினி கைதுக்குப் பிறகு வெளியில் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு