சென்னை: இரவில் தனியாக நடந்து சென்றவருக்கு செல்போன் கொள்ளையர்களால் நேர்ந்த அதிர்ச்சி!

சென்னை கோடம்பாக்கத்தில் நடந்துச் சென்ற மாநகராட்சி தூய்மை பணியாளரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றவர்கள் போலீஸிடம் சிக்கியிருக்கின்றனர்.
சென்னை கோளம்பாக்கம் ஜோதிநகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (51). இவர் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 14-ம் தேதி இரவு 11 மணியளவில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், பணியை முடித்துவிட்டு தனியாக சுரேஷ் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இரண்டு பேர் கண் இமைக்கும் நேரத்தில் சுரேஷிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றிருக்கின்றனர். சுதாரித்துக் கொண்ட சுரேஷ், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரின் கையைப் பிடித்துக் கொண்டார். அதனால் செல்போனைப் பறித்தவர்கள் தப்பிச் செல்ல முடியவில்லை.

சுரேஷ், சத்தம் போட்டதால் அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக அங்கு திரண்டு உதவி செய்திருக்கின்றனர். அதனால் செல்போனை பறிக்க முயன்றவர் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். பைக்கை ஓட்டியவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து கோடம்பாக்கம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பிடிப்பட்டவரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் செல்போனைப் பறிக்க முயன்றவர் துரைராஜ் (22), வடபழனியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. துரைராஜ் அளித்த தகவலின்படி தப்பியோடியவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிஷோர் (21), என்று தெரியவந்தது. அவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4 கிராமம் தங்கச் செயின் மற்றும் பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் நுங்கம்பாக்கம் பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.