Published:Updated:

சென்னை: வெளியில் பூட்டு; உள்ளே ஆபாச நடனம் - சுவர் ஏறிக் குதித்து நடவடிக்கை எடுத்த போலீஸ்!

ஆபாச நடனம் நடந்த பண்ணை வீடு
ஆபாச நடனம் நடந்த பண்ணை வீடு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பண்ணை வீட்டுக்கு வெளியில் பூட்டைப் போட்டுவிட்டு, உள்ளே பெண்களின் ஆபாச நடனம் விடிய விடிய நடந்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், தமிழக காவல்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். ஆங்காங்கே தற்காலிக சோதனைச்சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை கானத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் வேலுவுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் போலீஸ் டீமுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீடு அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்றார்.

பண்ணை வீடு
பண்ணை வீடு

அப்போது அந்தப் பகுதி ஆள்நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது. தகவலில் குறிப்பிடப்பட்ட, வீட்டின் முன் கேட் பூட்டப்பட்டிருந்தது. அதை கவனித்த இன்ஸ்பெக்டர் வேலு, தவறான தகவலோ என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் பண்ணை வீட்டுக்குள்ளிருந்து மியூசிக் சத்தம் கேட்பதை போலீஸார் கவனித்தனர். உடனடியாக அந்தப் பண்ணை வீட்டை போலீஸார் சுற்றிவளைத்தனர். கதவைத் திறக்கும்படி போலீஸார் கூறினர். ஆனால்ம் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. உயரதிகாரிகளுக்கு தகவலைத் தெரிவித்த போலீஸார் அதிரடியாக காம்பவுண்ட் சுவர் மீது எறி உள்ளே சென்றனர்.

பண்ணை வீட்டுக்குள் மது விருந்து படுஜோராக நடந்துகொண்டிருந்தது. அதோடு அரைகுறை ஆடையுடன் சில பெண்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த போலீஸார் உடனடியாக ஆக்‌ஷனில் களமிறங்கினர். போலீஸாரைப் பார்த்ததும் போதையிலிருந்த சிலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அடுத்து, நடனமாடிக்கொண்டிருந்த பெண்கள், கலந்துகொண்டவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் என அனைவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பண்ணை வீடு அமைந்துள்ள பகுதி
பண்ணை வீடு அமைந்துள்ள பகுதி

இது குறித்து போலீஸார் கூறுகையில், `` சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணியை அதிகரித்திருக்கிறோம். அப்போதுதான் கானத்தூர் காவல் எல்லை பகுதியிலிருக்கும் ஒரு பண்ணை வீட்டில் விதிகளை மீறி மதுவிருந்து நடப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றபோது வீட்டின் வெளியில் பூட்டு போடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள் பாட்டுச் சத்தம் கேட்டது. உடனடியாக போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சிலர் தடுத்திருக்கின்றனர். அதையும் மீறி உள்ளே சென்றபோது ஆபாச நடனம், மது விருந்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து விழாவுக்கு ஏற்பாடு செய்ததாக சென்னை வடபழனியைச் சேர்ந்த மதன்குமார் (32), வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (38) ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். மேலும், விழாவில் கலந்துகொண்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நடனமாடிய பெண்களை எச்சரித்து அனுப்பியிருக்கிறோம்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``கைதான மதன்குமார், நடன ஏற்பாட்டாளர். அதனால் இவருக்கு டான்ஸர்களுடன் பழக்கம் இருந்துவந்திருக்கிறது. மதன்குமாரும், பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்த ரமேஷும் நண்பர்கள். அதனால் இருவரும் சேர்ந்து அனுமதியின்றி ஆபாச நடனத்தை பண்ணை வீட்டுக்குள் நடத்திவந்திருக்கின்றனர். தங்களுக்கு தெரிந்தவர்களை மட்டுமே நடன நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றனர்.

`ஆனந்த நடனம்; அன்னாசிப் பழ கர்ப்பம்’ வீடியோவில் நித்யானந்தா குறிப்பிட்ட ஜூ.வி கட்டுரை சொல்வது என்ன?

நடன நிகழ்ச்சியில் பங்கேற்கவும் குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. மது விருந்தும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர். தகவல் கிடைத்துச் சென்ற போலீஸாரை மதன்குமாரும் ரமேஷும் மிரட்டியிருக்கின்றனர். இவர்கள் ஆன்லைன் மூலம் நடன நிகழ்ச்சிக்கு டிக்கெட்களை விற்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றார் விரிவாக.

கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். மதன்குமார், ரமேஷ் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு