Published:Updated:

சென்னை: `திருடிய நகைகள் காதலிக்கு; ரூ.20,000 செல்போன் ரூ.2,000’ - சிக்கிய சிறுவர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

போலீஸார், ``இவர்களிடமிருந்து 20 செல்போன்கள், தங்கச் செயின், வெள்ளி கைச்செயின் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். செல்போன் ஐ.எம்.இ.ஐ அடிப்படையில் அவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முருகன் (30). இவர் 8.3.2020-ல் வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 சவரன் தங்க நகை, ஒரு செல்போன் 2,000 ரூபாய் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முருகன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மார்ச் மாதம் பதிவாகிய இந்த வழக்கில் எந்தவித துப்பும் துலங்கப்படாமல் இருந்தது.

கொடுங்கையூர் காவல் நிலையம்
கொடுங்கையூர் காவல் நிலையம்

இந்தநிலையில் எம்.கே.பி நகர் உதவி கமிஷனராகப் பொறுப்பேற்ற கோ.அரிகுமார், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரித்தார். பின்னர் அந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தார். புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் உதவி கமிஷனர் அரிகுமார், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ், தனிப்படை எஸ்.ஐ-நித்யானந்தம், காவலர்கள் மணிவண்ணன், மரியதாஸ், சத்யமூர்த்தி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி நகருக்குச் சென்றனர்.

திருட்டு நடந்த 8.3.2020-ம் தேதி பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது முருகன் கூறியதுபோல சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் அவ்வழியாகச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த இளைஞர்கள் யார் என்று போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே பைக்கில் மூன்று பேர் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முருகன் வீட்டில் நகை, செல்போன் ஆகியவற்றைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இந்தத் திருட்டில் ஈடுபட்ட 3 பேரும் சிறுவர்கள். அதனால் அவர்களை போலீஸார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

உதவி கமிஷனர் அரிகுமார்
உதவி கமிஷனர் அரிகுமார்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் ஃபிரெண்ட்ஸ். இவர்கள் ஒரே பள்ளியில் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். அதன்பிறகு படிப்பை பாதியில் நிறுத்திய மூன்று பேரும் செல்போன் பறிப்பு, நகை திருட்டு எனக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளளர். இந்த மூன்று பேரும் இதுவரை 20 செல்போன்களைத் திருடியுள்ளனர். திருடிய செல்போன்களை நண்பர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். 20,000 ரூபாய் செல்போனை 2,000 ரூபாய்க்கு விற்றதால் இவர்களிடம் செல்போன்களை வாங்க கடும் போட்டி நிலவியுள்ளது.

செல்போன்கள், நகை திருட்டில் ஈடுபட்ட இவர்கள் மூன்று பேரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள். அதனால் செல்போன்களை வழிப்பறி செய்யும் இவர்கள் அதில் கிடைக்கும் வருமானத்தில் கஞ்சா, மது என சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். பணம் காலியானதும் மீண்டும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதில் ஒரு சிறுவனுக்கு காதலி ஒருவர் உள்ளார். திருடிய நகைகள், செல்போனை அந்தக் காதலிக்கு அன்பு பரிசாகக் கொடுத்துள்ளார் அந்தச் சிறுவன்.

காதல்
காதல்
representational image
சென்னை: காவலரின் கழுத்தை அறுத்த மஞ்சா நூல்; பெண் காவலர் காயம்! இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சிறுவனுடன் பழகுவதைக் காதலியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அதனால் காதலியின் குடும்பத்தினர் வீட்டை மாற்றிவிட்டனர். தற்போது சிறுவன், திருடிய நகைகள், செல்போனை காதலிக்குக் கொடுத்ததாகக் கூறினான். இதையடுத்து சிறுவனின் காதலியிடம் விசாரித்து வருகிறோம். இவர்களிடம் இருந்து 20 செல்போன்கள், தங்கச் செயின், வெள்ளி கைச்செயின் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். செல்போன் ஐ.எம்.இ.ஐ அடிப்படையில் அவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

துப்பு துலங்காத குற்ற வழக்கை திறம்பட விசாரித்து 3 சிறுவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்த உதவி கமிஷனர் அரிகுமார் தலைமையிலான போலீஸ் டீமை, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு