Published:Updated:

`அக்கறையாக பேசுவார்கள்' - சென்னை மூதாட்டிகளை டார்க்கெட் செய்யும் கோவில்பட்டியைச் சேர்ந்த பெண்கள்

மூதாட்டிகளிடம் நகைகளைத் திருடிய பெண்கள்
மூதாட்டிகளிடம் நகைகளைத் திருடிய பெண்கள்

சென்னையில் அரசு பேருந்து, ஆட்டோவில் பயணிக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த பெண்கள், நகை அணிந்திருக்கும் மூதாட்டிகளை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை சூளை சுப்பா நாயுடு தெருவைச் சேர்ந்தவர் காமாட்சியம்மாள் (70). இவர், பழைய வண்ணாரப்பேட்டை ரத்தின சபாபதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது அதே பஸ்சில் மூன்று பெண்கள், அன்பாகவும் அக்கறையாகவும் காமாட்சியம்மாளிடம் பேசினர். அவர்கள் இறங்கிச் சென்றபிறகு காமாட்சியம்மாள் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினைக் காணவில்லை.

கைதான பெண்கள், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
கைதான பெண்கள், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

இதுகுறித்து காமாட்சியம்மாள், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தச் சம்பவத்தையடுத்து சென்னை மாதவரத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி ஜெயலட்சுமி, ஆட்டோவில் பயணித்தபோது அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது. இதுகுறித்து ஜெயலட்சுமி மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பழைய வண்ணாரப்பேட்டை, மாதவரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மூதாட்டிகளைக் குறி வைத்து தங்க நகைகளை பெண்கள் திருடுவது தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் சரக காவல் நிலையங்களில் அடுத்தடுத்து புகார்கள் வரத் தொடங்கின. அதனால், இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சிவபிரசாத் உத்தரவிட்டார்.

`எங்கள் ஊரே திருடும்; ஒரு டீமுக்கு 3 பேர்!' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த `ஆட்டோ ராணி' அகிலா

உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் புவனேஸ்வரி, சீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ஆட்டோ, அரசு பேருந்துகளில் மப்டியில் கண்காணித்தனர். திருட்டு சம்பவங்கள் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது, ஒரே கும்பல் எனத் தெரியவந்தது. அவர்களுக்கு அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்கும் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

சென்னை: அதிகாலையில் தனியாகச் சென்ற சிறுமி! - இரு ஆட்டோ டிரைவர்களால் நேர்ந்த கொடுமை
சிசிடிவி
சிசிடிவி

இதையடுத்து தனிப்படை போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தங்க சாலை பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் வந்து இறங்கிய மூன்று பெண்கள் சிக்கினர். விசாரணையில் அவர்கள்தான் தனியாக செல்லும் மூதாட்டிகளைக் குறித்து நகைகளைத் திருடும் பெண்கள் எனத் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கௌரி, சின்னத்தாயி, சாந்தி எனத் தெரியவந்தது. இவர்களின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியாகும். கோவில்பட்டியிலிருந்து பஸ் மூலம் சென்னைக்கு வரும் இவர்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடுவதில் கில்லடிகள். இவர்களிடமிருந்து 12 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சென்னையில் தனியாக செல்லும் மூதாட்டிகளைக் குறி வைத்து நகை, பணம், செல்போன் திருடப்பட்டதாக புகார்கள் வந்தன. புகாரளித்தவர்களிடம் விசாரித்தபோது மூன்று அல்லது இரண்டு பெண்கள்தான் அன்பாகவும் அக்கறையாகவும் பேசினார்கள், தங்க நகைகளை கழுத்தில் அணியாதீர்கள், திருடிவிடுவார்கள் என்று அட்வைஸ் செய்தார்கள். அந்தப் பெண்கள் சென்றபிறகு நகைகளைக் காணவில்லை என்று தெரிவித்தனர். அதன்அடிப்படையில்தான் இதே ஸ்டைலில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பின்னணிகள் குறித்து விசாரித்தபோதுதான் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கும்பலாக வந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி உதவியால் மூன்று பெண்களை கைது செய்திருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு