Published:Updated:

சென்னை: ஒரே பைக்கில் 3 பேர்; சிக்கிய இளைஞர்கள் - சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பறிமுதல் செய்யப்பட்ட பேக், செல்போன், பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பேக், செல்போன், பணம்

சென்னையில் சைக்கிளில் சென்ற பெண்ணின் பேக்கை வழிப்பறி செய்த மூன்று இளைஞர்களைப் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை தரமணி காவல் நிலையத்துக்குட்பட்ட அம்பேத்கர் சட்டக் கல்லூரி சாலையில் சூர்யா (22) என்ற பெண், நேற்று பிற்பகலில் தனியாக சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று நபர்கள் சூர்யாவின் பேக்கைப் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து சூர்யா, தரமணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போது மஞ்சள் நிற பைக்கில் வந்தவர்கள்தான் பேக்கை பறித்துச் சென்றதாகக் குறிப்பிட்டார். சூர்யா கொடுத்த தகவலின்படி போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையில் சூர்யாவின் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டார்.

சென்னை: போலீஸ் எனக்கூறி நகைகள், வெள்ளிக்கட்டிகள், பணம் வழிப்பறி - ஒரே நாளில் 2 சம்பவங்கள்!
கைதானவர்
கைதானவர்

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்தச் சமயத்தில் கண்ணகி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் மதுவிலக்குப் பிரிவு காவலர் யாசர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சிவா ஆகியோர் அந்த வழியாகச் சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து காவலர் யாசர் விசாரித்தார். அவர்களின் கையில் ஆரஞ்ச் மற்றும் கறுப்பு நிற பேக் இருந்தது. அது குறித்து விசாரித்தபோது அந்த பேக்கை வழிப்பறி செய்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் பிடித்த காவலர் யாசர், தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது கண்ணகி நகரைச் சேர்ந்த பத்ரி (19). விக்கி (19), ராஜி என்கிற வீலிங் ராஜீ (19) எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து பேக் மற்றும் பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், புழல் சிறையில் அடைத்தனர்.

பைக்
பைக்

இது குறித்து தரமணி போலீஸார் கூறுகையில், ``வழிப்பறி நடந்த சில மணி நேரத்திலிலேயே சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் பிடித்துவிட்டோம். சூர்யாவின் பேக்கில் செல்போன், பணம் இருந்தன. அதை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றனர்.

வழிப்பறித் திருடர்களைப் பிடித்த மதுவிலக்கு பிரிவு காவலர் யாசர், அவருக்கு உதவிய ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சிவா ஆகியோருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு