Published:Updated:

ரெம்டெசிவிர் மருந்து வாங்க போலி ஆவணங்கள் - அரசை ஏமாற்ற நினைத்த 3 பேர் சிக்கியது எப்படி?

ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து

ரெம்டெசிவிர் மருந்து வாங்க அரசை ஏமாற்றத் திட்டமிட்ட டிரைவர், அவரின் நண்பர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து, சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டுவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்கள், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு, ஆதார் கார்டு, இதர ஆவணங்களைச் சமர்ப்பித்து மருந்துகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

மருந்து
மருந்து

இந்தநிலையில், 11.5.201-ல் காலை 11:30 மணியளவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் இடத்தில் தனியார் காவல் நிறுவனத்தின் அலுவலர் கலைவாணி என்பவர், பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது அவர் வரிசையில் நின்றிருந்த மூன்று நபர்கள் ஏற்கெனவே மருந்து வாங்கிச் சென்றுவிட்டு, மீண்டும் வந்து மருந்து வாங்க வரிசையில் நின்றதால் அவர்கள் மீது சந்தேகமடைந்திருக்கிறார். பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலரிடம் தகவல் தெரிவித்தார்.

சென்னை: தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு - 36,000 ரூபாய்க்கு விற்பனை

இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மாதவரம் பால்பணையைச் சேர்ந்த சிவகுமார் (43), அயனாவரத்தைச் சேர்ந்த கிறிஸ்டிபால் (34), மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35) எனத் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவர் பரிந்துரை செய்த கடிதங்களை, ஜெராக்ஸ் எடுத்து ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட சிவக்குமார் , கார் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு அறிமுகமான செல்வம் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் தஞ்சாவூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் செல்வத்துக்கு ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிக் கொடுக்கப் பரிந்துரைத்தார். அதற்காக அந்த மருத்துவர் கொடுத்த சீட்டு மூலம் சிவக்குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்தச் சமயத்தில் செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு டாக்டர், செல்வம் பெயரில் கொடுத்த மருந்துச்சீட்டில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றிய சிவக்குமார், அதை மூன்று ஜெராக்ஸ் எடுத்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்க கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குத் தன்னுடைய நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறார். மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு