Published:Updated:

சென்னை: தீபாவளிக்கு மது அருந்த ஆசைப்பட்ட தொழிலாளிக்கு நேர்ந்த சோகம் - டூ வீலரால் சிக்கிய 3 பேர்

வழிப்பறி வழக்கில் கைதான சூர்யா
வழிப்பறி வழக்கில் கைதான சூர்யா

சென்னையில் தீபாவளியன்று மது அருந்தச் சென்ற தொழிலாளியிடமிருந்து மது பாட்டில், தங்க செயின், செல்போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்ற மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோயில் ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் துரை (24). கட்டடத் தொழிலாளி. தீபாவளி தினத்தன்று மது அருந்த துரை, செம்மஞ்சேரி குமரன் நகர் ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அப்போது, வெளியில் வந்த துரையை மூன்று பேர்கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, மதுபாட்டில், அவர் அணிந்திருந்த தங்க செயின், செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இது குறித்து துரை, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.

வழிப்பறி வழக்கில் கைதான அஜித்
வழிப்பறி வழக்கில் கைதான அஜித்

உதவி கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில் தலைமை காவலர்கள் புஷ்பராஜ், தாமோதரன், திருமுருகன், முதல்நிலைக் காவலர்கள் வெங்கடேஷ், வினோத் ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது வழிப்பறி செய்துவிட்டு மூன்று பேர் டூ வீலரில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் விசாரித்தபோது சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சூர்யா (எ) கோழி சூர்யா (19), அஜித்குமார் (எ) ஜிங்கிரி(23), சஞ்சய்(19) ஆகியோர் அவர்கள் எனத் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர்.

விசாரணையில், `தீபாவளிக்கு மது அருந்தவும், கஞ்சா புகைக்கவும் கையில் பணம் இல்லாததால் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க செயினையும் செல்போனையும் பறித்தோம்' என மூன்று பேரும் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையிலடைத்தனர்.

இது குறித்து செம்மஞ்சேரி போலீஸார் கூறுகையில், ``சம்பவம் நடந்த இடத்தில் மூன்று பேர் டூ வீலரில் நின்றுகொண்டிருந்த சிசிடிவி காட்சி கிடைத்தது. அவர்களில் ஒருவன், துரையிடம் வழிப்பறி செய்துவிட்டு டூ வீலரில் காத்திருந்த இருவருடன் சேர்ந்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

கரூர்: பட்டப்பகலில் கத்திமுனையில் 15 பவுன் நகை வழிப்பறி! - ஆசிரியைகளுக்கு நேர்ந்த சோகம்
வழிப்பறி வழக்கில் கைதான சஞ்சய்
வழிப்பறி வழக்கில் கைதான சஞ்சய்

டூ வீலரின் பதிவு நம்பரைக்கொண்டு விசாரணை நடத்தியபோதுதான் அவர்கள் செம்மஞ்சேரியைச் சேர்ந்த சூர்யா, அஜித், சஞ்சய் எனத் தெரிந்தது. இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழிப்பறி வழக்கு நிலுவையிலுள்ள நிலையில்தான் மீண்டும் தீபாவளியன்று வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஒரு சவரன் தங்க செயின், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

சிசிடிவி பதிவுகளைக்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாரை அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் பாராட்டியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு