சென்னை:காதல் வலை; நம்பிச் சென்ற சிறுமி-கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காதலன், நண்பர்கள்

அம்மாவும் அப்பாவும் பிரிந்து சென்ற நிலையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நண்பர்களோடு சேர்ந்து கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் சில தினங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமியை உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அதனால், பூந்தமல்லி காவல் நிலையத்தில் சிறுமியைக் காணவில்லை என்று புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் வீட்டுக்கு வந்த சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கார்த்தி என்பவரைக் காதலித்ததாகவும் அவர் தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கண்ணீர்மல்கக் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் குன்றத்தூரைச் சேர்ந்த கார்த்தி (23), அவனின் நண்பர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த மணி (26), செல்வராஜ் (23) ஆகிய மூன்று பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் சிறுமியைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சிறுமியைக் காணவில்லை என்று புகாரளித்ததும் சட்டம் ஒழுங்கு போலீஸார் அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமி வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரிடம் விசாரித்தபோதுதான் கார்த்தி, சிறுமியைக் காதலித்திருக்கிறார். சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய கார்த்தி, அவரை அழைத்துச் சென்று விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறார். அப்போது கார்த்தியின் நண்பர்கள் மணி, செல்வராஜ் ஆகியோர் அந்த விடுதிக்கு வந்திருக்கின்றனர்.
பின்னர் மூன்று பேரும் சேர்ந்து சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த விவரத்தை உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் கார்த்தி, மணி, செல்வராஜ் ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். கைதான மூன்று பேரும் வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்திருக்கின்றனர். சிறுமியின் அப்பா, மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டார். அதேபோல சிறுமியின் அம்மாவும் தனியாக வாழ்ந்துவருகிறார்.

அதனால் ஆதரவின்றி தவித்த சிறுமியை உறவினர் ஒருவர் வளர்த்துவருகிறார். சிறுமி, ஆதரவில்லாமல் இருக்கும் தகவலையறிந்த செல்வராஜ், மணி ஆகியோர் கார்த்தி மூலம் காதல்வலை விரித்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சலிங் அளித்திருக்கிறோம்" என்றனர்.
சிறுமியை விடுதி அறையில் அடைத்துவைத்து கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.