Published:Updated:

`ஊரடங்கால் வேலையில்லை; செல்போன் கடையில் கை வைத்தோம்!’ - சென்னை இளைஞர்கள் சிக்கிய பின்னணி #Lockdown

ஊரடங்கால் திருடிய 3 இளைஞர்கள்
ஊரடங்கால் திருடிய 3 இளைஞர்கள்

ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்த 3 இளைஞர்கள், செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். சிசிடிவி உதவியால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (35). இவர், கண்ணகி நகர் சிக்னல் அருகே ஓ.எம்.ஆர் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாகக் கடையை மூடியுள்ளார். தற்போது சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வறுமையின் காரணமாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 16-ம் தேதி இரவு அந்தோணியின் கடை பூட்டை உடைத்த மர்மநபர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களைத் திருடிச் சென்றனர்.

கைதானவர்களுடன் போலீஸார்
கைதானவர்களுடன் போலீஸார்

கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவர்கள், அந்தோணிக்கும் கண்ணகிநகர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடைக்கு வந்த அந்தோணி, உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையிலிருந்த விலை உயர்ந்த செல்போன்கள், ஹெட் செட் என அனைத்தும் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அந்தோணி, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

மேலும், கொள்ளை நடந்த கடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, இரவு 11.30 மணியளவில் 3 இளைஞர்கள் வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும், அவர்கள் சிசிடிவி கேமரா மூலம் தங்களை அடையாளம் காண முடியாதளவுக்கு மேல்சட்டையைக் கழற்றிவிட்டு கடைக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியிருந்ன. பின்னர் கொள்ளையடித்துவிட்டு மேல்சட்டையை அணிந்துவிட்டு அவர்கள் 3 பேரும் வெளியில் செல்லும் காட்சிகளைப் பார்த்த போலீஸார் அதன் அடிப்படையில் விசாரித்தனர்.

`ஊரடங்கால் வேலை இல்லை. அதனால்தான் செல்போன் கடையில் திருடினோம்.'
கைதான இளைஞர்கள்
கைதானவர்களுடன் போலீஸார்
கைதானவர்களுடன் போலீஸார்

போலீஸாரின் விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தீனா என்கிற குதிரை தீனா (24), ஆர்யா (24), பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த சாம் என்கிற வினோத் (20) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் பிடித்து காவல் நிலையத்தில் விசாரித்தனர். விசாரணையில் மூன்று பேரும் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் ஹெட்செட் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இவர்கள் மூன்று பேரும் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்பவர்கள். அதனால் மூன்று பேரும் நண்பர்களாகியுள்ளனர். குதிரை சவாரி மூலம் கிடைத்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாகக் கடற்கரைக்கு யாரும் வருவதில்லை.

`கொரோனா சமயத்தில் திருடினால் அரஸ்ட் பண்ணமாட்டாங்க!' -தப்புக்கணக்கு போட்ட திருடனுக்கு நேர்ந்த சோகம்

அதனால் வருமானம் இல்லாமல் மூன்று பேரும் வறுமையில் வாடியுள்ளனர். இதையடுத்து கொள்ளையடிக்கத் திட்டமிட்ட மூன்று இளைஞர்களும் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். செல்போன்களைக் குறைந்த விலைக்கு விற்கத் திட்டமிட்டிருந்த நேரத்தில் மூன்று பேரும் சிக்கிக்கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

கைதான இளைஞர்கள், `ஊரடங்கால் வேலை இல்லை. அதனால்தான் செல்போன் கடையில் திருடினோம்' என்று போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு