Published:Updated:

`ஒரே கொள்ளை ஒஹோன்னு வாழ்க்கை!’- திருட்டு நகைகளைக் கொடுத்து காதலிகளின் மனதில் இடம்பிடித்த 3 இளைஞர்கள்

சென்னையில் சின்னச் சின்ன திருட்டு வழக்கில் கைதான 3 இளைஞர்கள், லட்சக்கணக்கு மதிப்புடைய தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். அதைத் தங்களின் காதலிகளிடம் கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை வியாசர்பாடி நியூ மெகசின் சாலையைச் சேர்ந்தவர் செல்வம் (43). இவரின் மனைவி அருணாதேவி (40). இந்தத் தம்பதியருக்குக் கீழ்தளத்தில் மளிகைக் கடையும் முதல் மாடியில் வீடும் உள்ளது. கடந்த 22.10.2019-ல் மளிகைக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அருணாதேவி, வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் 40 சவரன் தங்க நகையும் ஒரு லட்சம் ரூபாயும் கொள்ளைபோனதாகக் குறிப்பிட்டிருந்தார். கொள்ளை நடந்த மளிகைக் கடையில் கைரேகைப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த கொள்ளையர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். ஆனால் எந்தவிதத் துப்பும் துலங்கவில்லை.

போலீஸாரிடம் சிக்கிய பிரபா, சாய்கிருஷ்ணன், ஆனந்தகுமார்
போலீஸாரிடம் சிக்கிய பிரபா, சாய்கிருஷ்ணன், ஆனந்தகுமார்

இந்தநிலையில் கடந்த மாதம் எம்.கே.பி நகர் போலீஸ் உதவி கமிஷனராகப் பதவியேற்ற அரிகுமார், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரித்தார். அப்போது மளிகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியிடம் உதவி கமிஷனர் ஆலோசனை நடத்தினார். சிசிடிவி கேமரா பதிவுகள், கொள்ளையர்களின் கைரேகைப் பதிவு, வழக்கில் விசாரணை விவரங்களைக் கேட்டறிந்த அரிகுமார், கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்தார்.

இந்தச் சமயத்தில் வியாசர்பாடி மளிகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த ரகசியத் தகவல் உதவி கமிஷனர் அரிகுமாருக்குக் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீஸார் வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளுக்குச் சென்று கொள்ளைக் கும்பல் குறித்த விவரங்களைச் சேகரித்தனர்.

கொள்ளையடித்த நகைகள், பணத்தை மூன்று பேரும் பங்கீட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் அதைத் தங்களின் காதலிகளிடம் கொடுத்து சந்தோஷமாக இருந்துள்ளனர். சிறையிலிருந்து இட்டா அஜித் வெளியில் வருவதற்குள் மளிகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் சாய்கிருஷ்ணன், பிரபா, ஆனந்தகுமார் ஆகியோர் மீண்டும் சிறைக்குள் சென்றுவிட்டனர்
போலீஸ் அதிகாரி
`3 பெண்களுடன் நட்பு; காதல் பரிசாகத் திருட்டு பைக்குகள்!' - சென்னையில் சிக்கிய இன்ஜினீயர்

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் வடபழனியைச் சேர்ந்த பிரபா (21) என்பவர் சிக்கினார். அவர் அளித்த தகவலின்படி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (20), சாய் கிருஷ்ணன்(21) ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மளிகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரபா, ஆனந்தகுமார், சாய்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் கூட்டாளிகள். பிரபா, சாய் கிருஷ்ணன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த இட்டா அஜித்துடன் சாய் கிருஷ்ணன், பிரபா ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மூன்று பேரும் தங்கள் மீதுள்ள கொள்ளை வழக்குகள் குறித்து பேசியுள்ளனர். அப்போது எதற்கு சின்னச் சின்ன கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறீர்கள் என சாய்கிருஷ்ணனிடமும் பிரபாவிடமும் இட்டா அஜித் கேட்டுள்ளார். நீங்கள் வியாசர்பாடிக்கு வந்தால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று இட்டா அஜித் கூறியுள்ளார்.

உதவி கமிஷனர் அரிகுமார், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மற்றும்  திருட்டு வழக்கில் சிக்கியவர்கள்
உதவி கமிஷனர் அரிகுமார், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மற்றும் திருட்டு வழக்கில் சிக்கியவர்கள்

இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து வியாசர்பாடியில் கொள்ளையடிக்க சிறையில் இருந்தபடியே திட்டமிட்டுள்ளனர். மூன்று பேரும் ஜாமீனில் வெளியில் வந்தவுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். ஆனால், பிரபாவுக்கும் சாய்கிருஷ்ணனுக்கும் மட்டுமே ஜாமீன் கிடைத்தது. இட்டா அஜித்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் பிரபாவும் சாய்கிருஷ்ணனும் பைக்கில் வியாசர்பாடிக்கு வந்து இட்டா அஜித் கூறியதுபோல சில கடைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் செல்வம் நடத்திவந்த கடையை இருவரும் பார்த்துள்ளனர்.

பின்னர் கொள்ளையடிக்கத் தங்களுடைய கூட்டாளியான ஆனந்தகுமாரை அழைத்துக்கொண்டு பிரபாவும் சாய் கிருஷ்ணனும் வியாசர்பாடிக்கு வந்துள்ளனர். சம்பவத்தன்று செல்வம், கடையை இரவு 11 மணிக்குப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட மூன்று பேரும் கடையின் ஷட்டர் பூட்டை கடப்பாரை கம்பியால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், மளிகையில் இருந்த பீரோவை உடைத்து நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்
சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்

கொள்ளையடித்த நகைகள், பணத்தை மூன்று பேரும் பங்கீட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் அதைத் தங்களின் காதலிகளிடம் கொடுத்து சந்தோஷமாக இருந்துள்ளனர். சிறையிலிருந்து இட்டா அஜித் வெளியில் வருவதற்குள் மளிகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் சாய்கிருஷ்ணன், பிரபா, ஆனந்தகுமார் ஆகியோர் மீண்டும் சிறைக்குள் சென்றுவிட்டனர்" என்றார்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் பழைய குற்ற வழக்குகளை தூசி தட்டி விசாரித்து கொள்ளையர்களைப் பிடித்த உதவி கமிஷனர் அரிகுமாரின் தலைமையிலான போலீஸ் டீமிற்குக் காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு