Published:Updated:

நண்பனின் காதலுக்காக திருட்டு... சிசிடிவி-யால் சிக்கிய பட்டதாரிகள்! - சென்னையில் அதிர்ச்சி

சென்னை அருகே பம்மலில் நண்பனின் காதலிக்காக திருட்டு வழக்கில் பட்டதாரிகள் சிக்கியுள்ளனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம், பம்மல் பிரதான சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின். இவரின் கடைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி செயின் வாங்க இளைஞர் ஒருவர் வந்தார். கடையிலிருந்த தங்கச் செயின்களை கமலேஷ், இளைஞரிடம் காண்பித்தபோது அந்த மாடல்கள் பிடிக்கவில்லை. லேட்டஸ்ட் டிசைன் செயின் வேண்டும் என்று இளைஞர் கூறியதோடு தன்னுடைய செல்போன் நம்பரையும் கொடுத்துவிட்டு சென்றார். அதன்பிறகு கமலேஷ் கடைக்கு மீண்டும் அந்த இளைஞர் வந்தார். அப்போதும் கடையிலிருந்த தங்கச் செயின் மாடல்கள் இளைஞருக்குப் பிடிக்கவில்லை.

வினோத்
வினோத்

இதையடுத்து கமலேஷ் தனக்குத் தெரிந்த ஒருவரின் நகைக்கடையிலிருந்து 5 சவரன் எடையுள்ள 6 தங்கச் செயின்களை வாங்கி வந்து, இளைஞரிடம் காண்பித்திருக்கிறார். அப்போதுதான் நகை வாங்க வந்த இளைஞர், கமலேஷின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த கமலேஷ், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவிந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து தங்கச் செயின்களைத் திருடிச் சென்ற இளைஞரைத் தேடிவந்தார். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இளைஞர் சென்ற பைக்கின் பதிவு நம்பர் கிடைத்தது. அதை விசாரித்தபோது அது போலி எனத் தெரியவந்தது. இந்தநிலையில் நகைகளைத் திருடிச் சென்ற இளைஞருடன் இன்னொரு பைக்கில் இருவர் செல்லும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அந்த பைக்கை சிசிடிவி மூலம் போலீஸார் கண்காணித்தபோது சம்பவம் நடந்த இடத்திலிருந்து வந்தவாசி வரை சென்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தங்கச் செயினைத் திருடிய இளைஞர், வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். போலீஸாரின் விசாரணையில் தங்கச் செயினைத் திருடியது வந்தவாசியைச் சேர்ந்த வினோத் (32) என்து தெரியவந்தது. அதனால் வினோத்தை போலீஸார் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் கூறுகையில், ``கமலேஷ் கடையிலிருந்து தங்கச் செயினைத் திருடிச் சென்ற வினோத்தைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவரின் நண்பனான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியருக்கும் இன்னொரு நண்பனான லோகேஷிக்கும் இந்த திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. வினோத் அளித்த தகவலின்படி பிரான்சிஸ் சேவியரைப் பிடித்தோம். இவர்கள் இருவரிிடமிருந்து 30 சவரன் தங்கச் செயின்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

நகை பறிப்பு; ஜாலி வாழ்க்கை; பணம் தீர்ந்ததும் மீண்டும் திருட்டு! - போலீஸாரிடம் சிக்கிய 10 பேர்
பிரான்சிஸ் சேவியர்
பிரான்சிஸ் சேவியர்

வினோத்தும் பிரான்சிஸ் சேவியரும் பட்டதாரிகள். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகின்றனர். வினோத்துக்கு திருமணமாகிவிட்டது. பிரான்சிஸ் சேவியர் ஒரு பெண்ணைக் காதலித்து வருகிறார். அந்தப் பெண்ணை திருமணம் செய்ய அவருக்கு பணம் தேவைப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை தன்னுடைய நண்பர்களான வினோத், லோகேஷிடம் பிரான்சிஸ் சேவியர் கூறியிருக்கிறார். அப்போதுதான் தங்கச் செயின்களை திருடலாம் என மூன்று பேரும் முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கெனவே இவர்கள் பம்மல் பகுதியில் தங்கியிருந்ததால் அந்தப்பகுதி குறித்து மூன்று பேருக்கு நன்றாகத் தெரியும். அதனால் மூன்று பேரும் சிசிடிவி இல்லாத தங்க நகைக்கடைகளை முதலில் நோட்டமிட்டிருக்கிறார்கள். அப்போது கமலேஷ் என்பவரின் கடையில் சிசிடிவி இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட மூன்று பேரும் அவரின் கடையில் திருட முடிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் லோகேஷை தேடிவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு