சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றம்) (60). இவர் மத்திய அரசு துறையில் முக்கியமானப் பதவியில் உள்ளார். இவரின் வீட்டில் வாடகைக்கு பெண் ஒருவர் குடியிருந்து வருகிறார். அவர் மூலம் சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ராதா (40) என்பவர் குமாருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகினார். பின்னர் சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என குமாரிடம் நான்கரை லட்சம் ரூபாய் வரை ராதா கடனாக வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

கடனாக கொடுத்த பணத்தை ராதாவிடம் குமார் கேட்டுள்ளார். அப்போது ராதா காசோலையை குமாரிடம் கொடுத்துள்ளார். அதை குமார், வங்கியில் செலுத்தியபோது ராதாவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்தது. அதுகுறித்து ராதாவிடம் குமார் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து குமார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராதா மீது செக் மோசடி என கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராதாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் குமாரிடம் போனில் பேசிய ராதா தன்னை மன்னித்துவிடும் படியும் கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வந்தால் பணத்தை தந்து விடுகிறேன் என்று கூறினார். அதை நம்பிய குமார், கடந்த 19-ம் தேதி சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் விழுப்புரத்தைச் சேர்ந்த முருகன் (40), அவரின் மனைவி லட்சுமி (30), கொடுங்கையூரைச் சேர்ந்த புஷ்பா (49) ஆகியோருடன் ராதாவும் இருந்துள்ளனர். வீட்டுக்கு வந்த குமாருக்கு அங்கிருந்த பெண் ஒருவர் தண்ணீர் கொடுத்திருக்கிறார். அதைக் குடித்ததும் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன்பிறகு குமாரை நிர்வாணமாக்கி லட்சுமி என்பவர் நெருக்கமாக இருந்துள்ளார். அதை மற்றவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

மயக்கம் தெளிந்து கண்விழித்த குமார் அதிர்ச்சியடைந்தார். பிறகு ராதாவிடம் குமார் வாக்குவாதம் செய்தார். அப்போது ராதா, செல்போனிலிருந்த நெருக்கமான வீடியோவைக் காண்பித்தார். அதைப்பார்த்து குமார் அதிர்ச்சியடைந்தார். அப்போது இனிமேல் `பணத்தைக் கேட்டால் இந்த வீடியோவை உன் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துவிடுவேன்! மேலும் இந்த வீடியோவை வெளியிடாமலிருக்க சில லட்சங்கள் தர வேண்டும்' என குமாரை ராதா மிரட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு வந்த குமார், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனைச் சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறினார். அதன்பிறகு கடந்த 24-ம் தேதி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குமார் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் ஐ.பி.சி 120 பி (கூட்டு சதி), 384 (மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி), 506 (2) (மிரட்டல்), தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குமார் அளித்தப் புகாரின் பேரில் ராதாவிடமும் மற்ற பெண்களிடமும், முருகனிடமும் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குமாருடன் நெருக்கமாக இருக்கும் பெண்ணிடம் விசாரணை நடத்தினோம். அவர் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிவித்தார். அதன்பேரில் ராதாவிடம் விசாரித்தோம். அவரும் குமாரைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படி வீடியோ எடுத்ததாகக் கூறினார்.

இதையடுத்து அந்த வீடியோவைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கில் கைதான ராதா, அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போதுதான் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் புஷ்பா, லட்சுமி ஆகிய இரண்டு பெண்கள் அறிமுகமாகியுள்ளனர். லட்சுமியின் கணவர் முருகனுக்கும் இந்த வீடியோ தகவல் தெரியும். அதனால்தான் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம் என்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.