Published:Updated:

`ஆந்திரா டு சென்னை... கோட் வேர்டு மூலம் கடத்தல்' - போதை வழக்குகளின் அதிர்ச்சிப் பின்னணி!

கைதுசெய்யப்பட்டவர்கள்
News
கைதுசெய்யப்பட்டவர்கள்

வலி, மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் வாங்கி, அவற்றை போதை மாத்திரைகள் எனக் கூறி விற்ற நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக சங்கர் நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போதை மாத்திரைகளை அனகாபுத்தூர், காமராஜபுரம் சுடுகாட்டுப் பகுதியில் சிலர் விற்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அனகாபுத்தூர் பாத்திமா நகர், வெள்ளைச்சாமி தெருவில் வசித்துவரும் அஜீத்குமார் என்கிற அஜித் (24), அவரின் கூட்டாளிகள் வினித் (20), பல்லாவரத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் (22), தாம்பரத்தைச் சேர்ந்த கௌதம் (19) ஆகியோர் போதை மாத்திரைகளை விற்றது தெரியவந்தது.

கௌதம்
கௌதம்

இதையடுத்து சங்கர்நகர் போலீஸார் நான்கு பேரையும் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட அஜீத்குமார் மீது கஞ்சா வழக்கு நிலுவையிலிருக்கிறது. கஞ்சா விற்றுவந்த இவன், சில மாதங்களாக வலி, மனஅழுத்தம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதை மாத்திரை எனக் கூறி அந்தப் பகுதியில் விற்று வந்திருக்கிறான். சில வாரங்களுக்கு முன்பு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் போதைதரக்கூடிய மருந்து, மாத்திரைகளை விற்கக் கூடாது என மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதையும் மீறி விற்றால் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூடுதல் கமிஷனர் கண்ணன் எச்சரித்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் பிறகு சென்னையில் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் போதைக்காகப் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள் அஜீத் குமாருக்கு கிடைக்கவில்லை. அதனால் அஜீத் குமாரும் அவனின் கூட்டாளியான கௌதமும் சேர்ந்து ஆந்திராவிலிருந்து போதைத்தரக்கூடிய மாத்திரைகளை வாங்கிவர முடிவு செய்தனர். இதற்காக வினித், அரவிந்த்குமார் ஆகியோரிடம் பணம் கொடுத்து போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்றுவந்திருக்கின்றனர். போதை மாத்திரைகளை வாங்க சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு வினித்தும் அரவிந்த்குமாரும் பைக்கில் சென்று வந்திருக்கின்றனர்.

வினித்
வினித்

ஆந்திராவில் பத்து மாத்திரைகளைக்கொண்ட ஓர் அட்டையை 320 ரூபாய்க்கு வாங்கி வந்து, இங்கு ஒரு மாத்திரையை 500 ரூபாய்க்கு இந்தக் கும்பல் விற்றுவந்திருக்கிறது. அதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. இந்த மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடம்பில் ஏற்றிக்கொள்பவர்கள் போதையிலிருப்பதாக உணர்ந்திருக்கின்றனர். இதையடுத்து இந்தக் கும்பலிடமிருந்து 100 போதை மாத்திரைகள், ஊசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து சென்னையில் போதை மாத்திரைகள் எனக் கூறி வலி, மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பவர்களைக் கண்காணித்துவருகிறோம்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்துப் பதிவுபெற்ற மருந்தாளுனர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.வசந்த்குமாரிடம் பேசினோம். ``மதுபானங்கள், போதை மாத்திரைகள், போதைப்பொருள்கள் ஆகியவற்றைவிட போதை தரக்கூடியதாக கருதும் மருந்து, மாத்திரைகளின் விலை குறைவு. அதனால் ஏராளமான இளைஞர்கள் இந்த போதைக்கு அடிமையாகிவருகின்றனர். அது போதையே இல்லை. சுயநினைவற்ற நிலையில் இருப்பதைத்தான் போதை என்று நினைத்துக்கொள்கிறார்கள். பொதுவாக வலிப்புநோய், மன அழுத்தம், வலி நிவாரணத்துக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஒருவகையான மயக்கம் ஏற்படும். அதை போதை என கருதிக்கொண்டு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவைவிடக் கூடுதலாக உபயோகிக்கும்போது நரம்பு மண்டலம் முழுவதும் பாதிக்கப்படுகிறது.

வசந்த்குமார்
வசந்த்குமார்

ஒருவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இது போன்ற மருந்து, மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அவரின் ஆயுள் காலத்தில் 10 ஆண்டுகள் குறையும். ஆன்லைனில் எந்தவிதக் கட்டுபாடும் இல்லாமல் மருந்து, மாத்திரைகள் எளிதாகக் கிடைத்துவருகின்றன. தொடர்ந்து ஒரு வாரம் இது போன்ற மாத்திரை, மருந்துகளைப் பயன்படுத்தினால் அதற்கு அவர்கள் அடிமையாகிவிடுகின்றனர். அதனால், இந்த மாத்திரை, மருந்துகளை மெடிக்கல் கடைகளில் விற்கக் கூடாது. அதோடு மெடிக்கல் கடைகளில் மருந்தாளுனர்கள் அனுமதியில்லாமல் மருந்துகள் விற்பதை அனுமதிக்கக் கூடாது. அதிக அளவில் இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது கிட்னி, நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன" என்றார்.

போதைக்காகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள், மன அழுத்த மாத்திரைகளுக்கு சில ரகசியப் பெயர்களை அதை விற்கும் கும்பல் பயன்படுத்திவருகிறது. அதில் இஸட் ப்ளஸ் , ஒன் டு ஒன், உற்சாகம், ரெஃப்ரெஷ் உள்ளிட்டவை அதிக அளவில் புழக்கத்திலிருக்கும் வார்த்தைகள். போதை மாத்திரை என்று கேட்காமல் இந்த ரகசிய வார்த்தைகளைத்தான் இந்தக் கும்பலும், அதை வாங்குபவர்களும் பயன்படுத்திவருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில் கடந்த 10.12.2021-ம் தேதி முதல் 11.12.2021-ம் தேதி வரை சென்னையில் போதைப்பொருள்களுக்கு எதிரான சிறப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேர் கைதுசெய்யப்பட்டனர். கஞ்சா தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 14 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிது.

கமிஷனர் சங்கர் ஜிவால்
கமிஷனர் சங்கர் ஜிவால்

வலி நிவாரண மாத்திரைகள், எல்.எஸ்.டி ஸ்டாம்ப் ஆகியவற்றை போதைக்காகப் பயன்படுத்தியது விற்பனை செய்தது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து 120 வலி நிவாரண மாத்திரைகள், 169 எல்.எஸ்.டி ஸ்டாம்ப், நான்கு செல்போன்கள், ஒரு பைக், ஒரு கார், 17,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலைப் பொருள்களை தயாரித்தல், விற்பனை செய்தல் தொடர்பாக 37 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 39 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து 85.4 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 151 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கஞ்சா, குட்கா, மாவா, வலி நிவாரண மாத்திரைகளைச் சட்ட விரோதமாக விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.