Published:Updated:

`நான் சொன்னதை மட்டும் அம்மா கேட்டிருந்தால்..!'- சென்னை ஆட்டோ டிரைவர் கொலையில் சிக்கிய மகன்

`நான் சொன்னதை அம்மாவும் அன்சர் பாஷாவும் கேட்டிருந்தால் எனக்கு இந்தநிலைமை ஏற்பட்டிருக்காது' என்று கொலை வழக்கில் சிக்கிய மகன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அன்சர் பாஷா
கொலை செய்யப்பட்ட அன்சர் பாஷா

சென்னை சிட்லபாக்கம் வேங்கை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (31). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்த அன்சர் பாஷா, விநாயகபுரத்தில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டிவந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அன்சர் பாஷா, கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி, அன்சர் பாஷாவைக் கொலை செய்த குற்றத்துக்காக கொளத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த அஜித் (21), அவரின் கூட்டாளிகள் அஸ்வின் (22), அசோக் (22), சந்தோஷ்குமார் (22), பன்னீர்செல்வம் (22) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

அஜித்
அஜித்

இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``அஜித்தின் அம்மா லட்சுமிக்கும் அன்சர் பாஷாவுக்கும் இடையே பழக்கம் இருந்துவந்தது. அதை அஜித் கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் கேட்கவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறில் அஜித்தை 2 தடவை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளார் அன்சர் பாஷா. ஆனால் அதிலிருந்து அஜித் தப்பிவிட்டார். இதனையடுத்து, தன்னுடைய நண்பர்கள் மூலம் அன்சர் பாஷாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் அஜித்.

சம்பவத்தன்று இரவு ரெட்ஹில்ஸ் ரோடு, ஸ்கூல்ரோடு சந்திப்பு பகுதியில் அன்சர் பாஷா, ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் தகவல் அஜித்துக்குக் கிடைத்தது. இதனால் கூட்டாளிகளுடன் அங்கு சென்ற அன்சர் பாஷாவைக் கத்தியால் வெட்டியுள்ளார். இதனை எதிர்பார்க்காதவர், அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அங்கிருந்த ரயில்வே கேட் மூடியிருந்ததால் சிக்கிக் கொண்டார். அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய அஜித் கும்பல் தலைமறைவாக இருக்கும் இடம் குறித்துத் தெரியவந்தது. அங்கு சென்று 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்கின்றனர்.

`முதலில் அக்காதான் பறந்தார்!'- தேனிலவில் புதுமாப்பிள்ளைக்கு  நேர்ந்த சோகத்தை விவரிக்கும் தம்பி

ஆட்டோ டிரைவரைக் கொலை செய்தது குறித்துப் போலீஸாரிடம் பேசிய அஜித் , `நான் பெயின்டிங் வேலை செய்துவருகிறேன். விநாயகபுரத்தில் அன்சர் பாஷா தங்கியிருந்தபோது என் அம்மா லட்சுமியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. அம்மாவிடமும் அன்சர்பாஷாவிடமும் பல தடவை சொல்லியும் இருவரும் கேட்கவில்லை. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட மோதலில் 2 தடவை அன்சர் பாஷா, என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால், அதிலிருந்து நான் தப்பிவிட்டேன். இதனால் அன்சர் பாஷாவைக் கொலை செய்ய நான் திட்டமிட்டபோது அவரும் தப்பிவிட்டார்.

அஸ்வின்
அஸ்வின்

இந்த சம்பவத்துக்குப் பிறகு அன்சர் பாஷாவைக் கொலை செய்யக் காத்திருந்தேன். சம்பவம் நடந்த அன்று, ஆட்டோவில் அன்சர் பாஷா தனியாக இருப்பதைப் பார்த்தேன். உடனே என் நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தேன். அவர்கள் வந்தபிறகு அன்சர் பாஷாவை கொலை செய்ய அங்கு சென்றோம். ஆட்டோவில் அன்சர் பாஷாவின் அம்மா இருந்தார். எங்களின் குறிக்கோள் அன்சர் பாஷாவை கொல்வது மட்டும்தான். இதனால் ஆட்டோவுக்குள் வைத்தே அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். ஆனால், அவர் எங்களிடமிருந்து தப்பி ஓடினார்.

இந்த முறையும் அன்சர் பாஷாவை உயிரோடு விட்டுவிடக் கூடாது என்று கருதிய நானும் என்னுடைய நண்பர்களும் அவரை விடாமல் துரத்தினோம். அந்தப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டின் மீது மோதி அன்சர்பாஷா கீழே விழுந்தார். அதன்பிறகு அவரால் ஓட முடியவில்லை. இதனால் அந்த இடத்திலேயே அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டோம். ஆனால் போலீஸார் எங்களைப் பிடித்துவிட்டனர். நான் சொன்னதை அம்மாவும் அன்சர் பாஷாவும் கேட்டிருந்தால் இந்த நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்காது' என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அசோக்
அசோக்

அன்சர் பாஷா மீதும் அஜித் மீதும் காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஜித்தின் நண்பர்கள் நட்புக்காக இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அஜித்துக்கு 21 வயது, மற்ற 4 பேருக்கு 22 வயது. வாழவேண்டிய வயதில் கொலை வழக்கில் சிக்கியது குறித்து போலீஸார் விசாரித்தபோது, `நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றால் தோள் கொடுப்போம்' எனத் தெரிவித்தார்களாம்.