Published:Updated:

``கண்முன்னால் திருடுவார்கள்; கண்டுபிடிக்க முடியாது!"- ஹரியானா பரம்பரை ஜிப் திருடர்களின் ஊசி டெக்னிக்

ஜிப் திருடர்கள்
ஜிப் திருடர்கள்

`ரயிலில் பயணிக்கும்போதே நோட்டமிட்டுவிடுவோம். பின்னர் உதவி செய்வதுபோல சக பயணிகளின் டிராவல் பேக்குகளை கீழே இறக்கும்போது ஜிப்களை பிளேடால் கிழித்து நகை, பணத்தைக் கொள்ளையடிப்போம்' என ஜிப் திருடர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

ஹைதராபாத்திலிருந்து குடும்பத்தோடு இன்ஜினீயர் ஒருவர் கடந்த 27.11.2019-ல் சென்னைக்கு ரயிலில் வந்தார். பின்னர் அவர் புதுச்சேரியில் உள்ள திருமணத்துக்குச் சென்றார். சந்தோஷமாகத் திருமண வீட்டுக்குச் செல்ல தயாரான இன்ஜினீயரின் மனைவி, டிராவல் சூட்கேஸைத் திறந்தார். அப்போது அவர் அதில் வைத்திலிருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. அதனால் இன்ஜினீயரின் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. டிராவல் சூட்கேஸின் ஜிப் பகுதியில் ஒரு கைவிடும் அளவுக்கு கிழிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த இன்ஜினீயர் குடும்பம், ரயில் பயணத்தின்போது நகைகள் திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

ராஜேந்தரர் குமார்
ராஜேந்தரர் குமார்

இதையடுத்து புதுச்சேரியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த இன்ஜினீயர், ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் சென்னை ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன், டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வைரவன், வேலு ஆகியோர் தலைமையில் எஸ்.ஐ-க்கள் பாண்டியன், ராதாகிருஷ்ணன், சாமன்னன், சிவகுருநான் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், சம்பவத்தன்று இன்ஜினீயர் குடும்பம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் பிளாட்பாரத்தில் உள்ள சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது இன்ஜினீயர் குடும்பம் ரயிலிலிருந்து இறங்கும்போது உடமைகளை கீழே இறக்கி வைக்க சிலர் உதவி செய்தது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

அவர்கள் குறித்து இன்ஜினீயர் குடும்பத்தினரிடம் ரயில்வே போலீஸார் விசாரித்தனர். அப்போது உதவி செய்தவர்கள் யரென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், எங்களுடன் அவர்கள் ரயிலில் வந்தனர் என்று மட்டும் கூறினர். அதனால் அந்த ரயிலில் இன்ஜினீயர் குடும்பம் வந்த முன்பதிவு ரயில் பெட்டியில் பயணித்தவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். ஆனால், அதில் உதவி செய்தவர்களின் பெயர்கள் இல்லை. இதனால் போலீஸாருக்கு, உதவி செய்வதுபோல நகைகளைத் திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுத்தது. சம்பவத்தன்று அந்தப் பகுதியில் உள்ள செல்போன் சிக்னல்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

மதன்குமார்
மதன்குமார்

சைபர் க்ரைம் பிரிவைச் சேர்ந்த ஜான் என்பவரின் தலைமையிலான போலீஸ் டீம், நகைகொள்ளையின் முக்கிய க்ளு ஒன்றை தனிப்படை போலீஸாருக்குத் தெரிவித்தது. சென்னை சென்ட்ரலில் காட்டிய செல்போன் சிக்னல் தற்போது வடமாநில ரயிலில் காட்டுகிறது என்று சைபர் க்ரைம் போலீஸார் கூறியதும் சென்னையிலிருந்து விமானத்தில் தனிப்படையில் ஒரு டீம் வடமாநிலத்துக்குச் சென்றது. அங்கிருந்த செல்போன் சிக்னல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைக் காட்டியது. அதனால், ரயில் நிலையத்தில் செல்போன் சிக்னல் மூலம் 5 பேரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``இன்ஜினீயரின் மனைவி கொடுத்த புகாரைப்போல இன்னும் 3 பேர் சூட்கேஸில் வைத்திருந்த நகைகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தனர். நகைகளைக் கொள்ளையடிப்பவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வடமாநிலங்களில் கொள்ளையர்களைத் தேடிவந்த நிலையில் சென்னை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் நகைக் கொள்ளையர்களின் செல்போன் சிக்னல் காட்டியது.

சுனில்குமார்
சுனில்குமார்

அதன்பேரில் விசாரணை நடத்தி ஹரியானா, ஹிஷார் மாவட்டம், ஹன்ஸி தாலுகா, சொர்க்கி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தரர் குமார் (46) , அவரின் கூட்டாளிகள் மதன்லால் (38), ராம்தியா (40), சுனில்குமார் (34) , சுரேஷ்குமார் (39) ஆகிய 5 பேரை கைது செய்தோம். அவர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 85 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

தனிப்படை போலீஸார் கூறுகையில், ``ரயிலில் பயணிகளுடன் பயணிக்கும் இந்தக் கொள்ளையர்களின் பூர்வீகம் ஹரியானா மாநிலம், சொர்க்கி கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் திருட்டுச் சம்பவங்களில் பரம்பரை, பரம்பரையாக ஈடுபட்டுவருகின்றனர். இந்தக் கூட்டத்துக்கு தலைமை ராஜேந்தரர் குமார். இவருக்கு கீழ் 4 பேர் உள்ளனர். இவர்கள் ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட்களை எடுத்துக் கொண்டு டிக்கெட் பரிசோதகர்களின் தயவால் முன்பதிவு ரயில் டிக்கெட் பெட்டியில் பயணிப்பார்கள். பின்னர், அந்தப் பெட்டியில் பயணிப்பவர்களிடம் சகஜமாகப் பேசுவார்கள்.

ராம்தியா
ராம்தியா

அப்போது பயணிகளின் குடும்ப சூழல், அவர்கள் குறித்த விவரங்களைத் தெரிந்துக்கொள்வார்கள். பின்னர், ரயில் பெட்டியில் வசதியானவர்களுக்கு உதவி செய்வதுபோல நடிப்பார்கள். ரயிலிலிருந்து இறங்கும்போது அவர்களின் உடமைகளைக் கீழே இறக்கி வைக்க உதவுவார்கள். அப்போது உடல் பருமனாக இருக்கும் ராஜேந்தரர் குமார், பிளாட்பாரத்தில் நின்றுகொள்வார். ரயில் பெட்டியிலிருந்து ஒவ்வொரு உடமையையும் 3 பேர் கீழே இறக்குவார்கள். அதை ராஜேந்தரர் குமாரின் அருகில் நிற்பவர் பிளாட்பாரத்தில் வைப்பார். உடமைகளுக்குச் சொந்தகாரர்களின் கவனத்தை ராஜேந்தரர் குமார் திசைதிருப்பும்வகையில் பேசுவார்.

இந்தச் சமயத்தில் உடல் பருமனான ராஜேந்தரர்குமார் உடமைகளை மறைத்தபடி நின்றுகொள்வார். அப்போது கையில் வைத்திருக்கும் சிறிய அளவிலான பிளேடு, ஊசியால் டிராவல் சூட்கேஸின் ஜிப்களைத் திறப்பார்கள். ஒரு கை உள்ளே நுழையும் அளவுக்குத் திறந்ததும் நகைகள் மற்றும் விலை உயர்ந்த உடமைகள், பணம் ஆகியவற்றை 20 நொடிகளிலிருந்து ஒரு நிமிடத்துக்குள் திருடிவிடுவார்கள். பின்னர், அந்த ஜிப்பை மூடி பிளாட்பாரத்தில் வைத்துவிடுவார்கள். அதனால் உடைமைகளின் உரிமையாளர்களுக்கு இவர்கள் மீது எந்தவித சந்தேகமும் வராது. மாறாக உதவி செய்ததற்காக நன்றிகளைக் கூறிவிட்டு சென்றுவிடுவார்கள்.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

வீட்டுக்குச் சென்ற பிறகுதான் கொள்ளை நடந்தது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இந்த வழக்கில் செல்போன் சிக்னலும் சிசிடிவி கேமராவும்தான் கொள்ளையர்களைப் பிடிக்க எங்களுக்கு உதவியாக இருந்தது. இந்தக் கொள்ளையர்களுக்கு இந்தியா முழுவதும் வழக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. வடமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் வரும் இவர்கள் ஜிப்பை திறந்து கொள்ளையடித்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்கள். இவர்கள் மீது மகாராஷ்ட்ரா, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் வழக்குகள் உள்ளது உறுதியாகியுள்ளன. மேலும், இவர்கள் ஒரு திருட்டுக்கு ஒரு சிம்கார்டுகளைப் பயன்படுத்துவார்கள். அந்தத் திருட்டை வெற்றிகரமாக முடித்ததும் அந்தச் சிம்கார்டை தூக்கிபோட்டுவிடுவார்கள். ஆனால், சென்னைக்கு வந்த ஹைதராபாத் இன்ஜினீயர் குடும்பத்தினரிடம் நகைகளைக் கொள்ளையடித்த பிறகு, அந்தச் சிம்கார்டை அடுத்த தடவை பயன்படுத்தியபோதுதான் எங்களிடம் சிக்கிக் கொண்டனர்" என்றனர்.

பின் செல்ல