சென்னையில் இரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவோர் மீது வழக்கு பதிவுசெய்து, கைது செய்துகொண்டிருக்கிறது காவல்துறை. கடந்த 21-ம் தேதி வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசுக் கல்லூரி அருகில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர்.

இந்த மார்ச் மாதத்தில் மட்டும் பைக் சாகசங்களில் ஈடுபட்ட 18 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களிடமிருந்து 21 விலையுயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறார்கள். இந்தத் தொடர் கைதையடுத்து சில தினங்கள் அமைதியாக இருந்த இளைஞர்கள், மீண்டும் பைக் சாகசங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நேற்று வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே, கோயம்பேடு 100 அடி சாலையில், நியூ ஆவடி சாலையில், மீனம்பாக்கம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். மேலும், அவர்களிடமிருந்த விலையுயர்ந்த பைக்குகளை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல, சென்னை பாண்டிபஜார், ராயபுரம் பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சிறார்கள், கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். `18 வயதாகாத சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை இயக்காமல் அவர்களின் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்’ என்றும், `பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.