Published:Updated:

`ஐபேடில் ஆயிரக்கணக்கில் சிறார்வதை வீடியோக்கள்!' - சென்னை மாணவியால் சிக்கிய 72 வயது முதியவர்

ஐபேடில் சிறார்வதை வீடியோக்களை வீட்டின் ஹாலில் வைத்துப் பார்த்த முதியவர் குறித்த ரகசிய தகவலைக் கல்லூரி மாணவி ஒருவர், போலீஸிடம் கூறினார். அதன்பேரில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முதியவர் மோகன்
முதியவர் மோகன்

சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த 22 வயது கல்லூரி மாணவி கொடுத்த புகாரைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவி கொடுத்த புகாரில், ``நான், குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் முதியவரின் ஐபேடில் சிறார் வதை வீடியோக்கள் உள்ளன. அந்த வீடியோக்களை அவரின் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் கல்லூரி மாணவிகளைப் பார்க்கக் கட்டாயப்படுத்துகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

முதியவர் மோகன்
முதியவர் மோகன்

மாணவி குற்றம் சுமத்திய முதியவரின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஐபேடில் சிறார் வதை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தன. அதைப்பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த முதியவரை விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துவந்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (72). வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், தற்போது கோழிப்பண்ணை நடத்திவருகிறார். இவரின் வீட்டில் குடியிருக்கும் கல்லூரி மாணவி, மோகனின் வீட்டுக்குள் சென்றபோது, மோகன் தன்னுடைய ஐபேடில் சிறார்வதை வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அதைப்பார்த்ததும் மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால், மோகன் எதையும் கண்டு கொள்ளவில்லை. மாணவி கொடுத்த புகாரின்பேரில் மோகனைக் கைது செய்துள்ளோம். அவரின் ஐபேடில் உள்ள சிறார் வதை வீடியோக்கள் குறித்து விசாரித்துவருகிறோம்" என்கின்றனர்.

representational image
representational image

மோகன், குடியிருக்கும் வீட்டில் சில பகுதிகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் குடியிருக்கும் மாணவியை உதவிக்காக மோகனின் மனைவி அழைத்துள்ளார். அதன்பேரில் வீட்டுக்குள் சென்ற அந்த மாணவியிடம்தான் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறார்வதை வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை செய்ய மோகன் முயற்சி செய்துள்ளார். இதையடுத்து மோகன் மீது போக்சோ உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சிறார் வதை வீடியோக்களைப் பதிவு செய்தவர்கள், பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், செல்போன், கம்ப்யூட்டர்களில் அந்த வீடியோக்களை வைத்திருப்பவர்கள் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

திருச்சியில் சிறார் வதை வீடியோக்களைப் பகிர்ந்தது தொடர்பாக கிறிஸ்டோபர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது தமிழகம் முழுவதும் சிறார் வீடியோக்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், பகிர்ந்தவர்களின் பட்டியைலை போலீஸார் சேகரித்துள்ளனர்.

ரவி ஐபிஎஸ்
ரவி ஐபிஎஸ்

சென்னையில் நடந்த கல்லூரி விழாவில் பேசிய அந்தப்பிரிவின் கூடுதல் டிஜிபி ரவி, சென்னையில் சிறார் வதை வீடியோக்கள் தொடர்பாக 30 பேரின் பட்டியலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் பட்டியல் அடிப்படையில் 30 பேரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் ஐபேடில் சிறார் வதை வீடியோக்களை வைத்திருந்த முதியவர் மோகன், கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகனின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்தனர்.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் கூறுகையில், ``மோகனின் மகள்கள் இருவரும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர். சென்னை வீட்டில் மனைவியுடன் மோகன் குடியிருந்துவருகிறார். வீட்டுக்குள் ஐபேடில் பதிவிறக்கம் செய்த ஆபாச வீடியோக்களையும் சிறார் வதை வீடியோக்களையும் பார்ப்பதை மோகன் வழக்கமாக வைத்துள்ளார். மோகனின் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் கல்லூரி மாணவி, வீட்டுக்குள் சென்றபோதுகூட மோகன் வீடியோ பார்ப்பதை நிறுத்தவில்லை என்று மாணவி காவல் நிலையத்தில் தெரிவித்தார்.

சிறார் வதை வீடியோ விவகாரம்- முதல் நபராகத் திருச்சி மெக்கானிக் கைது!

மேலும், அந்த மாணவிக்கு இரவு நேரத்தில் மோகனின் செல்போனிலிருந்து அழைப்புகள் சென்றுள்ளன. அப்போது மாணவியிடம் அநாகரிகமாக மோகன் பேசியதாக மாணவி காவல் நிலையத்தில் கூறினார். அதன்அடிப்படையில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் மோகனிடம் விசாரித்தபோது அவர் வீடியோ பார்த்ததை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐ பேடில் ஆயிரக்கணக்கான ஆபாச மற்றும் சிறார்வதை வீடியோக்கள் இருந்தன. அதையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.