Published:Updated:

சென்னை: `காட்டிக்கொடுத்த செல்போன் சிக்னல்! - நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன இன்ஃபார்மர்

செல்போன் சிக்னலால் சிக்கிய மகேஷ்
செல்போன் சிக்னலால் சிக்கிய மகேஷ்

சென்னை, தியாகராய நகரில் வயதான தம்பதியைக் கட்டிப்போட்டு, 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் எட்டுப் பேரை போலீஸார் செல்போன் சிக்னல் மூலம் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை தி.நகர், சாரதாம்பாள் தெருவில் வசித்துவருபவர் நூருல் ஹக் (71). கடந்த 30.9.2020-ல் அவரையும் அவரது மனைவியையும் கட்டிப்போட்டு, 250 சவரன் நகை, பணம் மற்றும் காரை எட்டுப் பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது. இது குறித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடிவந்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நூருல்லின் உறவினரான மொய்தீன் என்பவருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

எல்லப்பன்
எல்லப்பன்

அவரின் செல்போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் குறித்த ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த மகேஷ் (33), செங்கல்பட்டு ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த சுகுமார் (27), செங்கல்பட்டு கீரப்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் (25), சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் (45), சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் (38), தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆலன் (39), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ்குமார் (27), கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த தம்பித்துரை என்கிற அபேன் (40) ஆகிய எட்டுப் பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து மூன்று பைக்குகள், மூன்று கத்திகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நூருல்ஹக்கின் உறவினரான மொய்தீன்தான் கொள்ளைச் சம்பவத்துக்கு இன்ஃபார்மராக இருந்துவந்திருக்கிறார். இவர்தான் கொள்ளைக் கும்பலிடம், `நூருல் ஹக்கின் வீட்டில் பணம், தங்க நகைகள் அதிகளவில் இருக்கின்றன. அந்த வீட்டில் குடியிருக்கும் நூருல், அவரின் மனைவி ஆகியோர் வயதானவர்கள். அதனால், அங்கு சென்று கொள்ளையடித்தால் லைஃப்பில் செட்டிலாகிவிடலாம்’ என்று கூறியிருக்கிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
சென்னை: `250 சவரன் நகைகள்; ரூ. 95 லட்சம் பணம்' -  வயதான  தம்பதியரைக் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை!

அதன்படி கொரோனா தொற்றால் நூருல் ஹக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியிருக்கும் தகவலையும் மொய்தீன், கொள்ளைக் கும்பலிடம் தெரிவித்திருக்கிறார். அந்தத் தகவலைக் கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், வயதான தம்பதியைக் கட்டிப்போட்டுவிட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது. கொள்ளையடித்த பணம், மொய்தீனிடம் இருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார். அதனால் மொய்தீனைத் தேடிவருகிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு