Published:Updated:

`குறைந்த வட்டியில் கடன்!' - மாற்றுத்திறனாளியிடம் பணத்தை சுருட்டிய டெல்லி கேங் சிக்கியது எப்படி?!

மோசடி வழக்கில் கைதானவர்கள்

மாற்றுத்திறனாளிக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய பெண்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

`குறைந்த வட்டியில் கடன்!' - மாற்றுத்திறனாளியிடம் பணத்தை சுருட்டிய டெல்லி கேங் சிக்கியது எப்படி?!

மாற்றுத்திறனாளிக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய பெண்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

Published:Updated:
மோசடி வழக்கில் கைதானவர்கள்

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். மாற்றுத்திறனாளியான இவரிடம் கடந்த அக்டோபர் 2020-ம் ஆண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், குறிப்பிட்ட ஒரு நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் அந்த நபர், `எங்களின் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு திட்டம் ஒன்று இருக்கிறது' எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு வட்டி சலுகையும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட சரவணன், முதலீடு திட்டங்களின் விவரங்களை கேட்டறிந்திருக்கிறார். அதனால் போனில் பேசியவர், திட்டம் குறித்து விவரித்ததோடு சரவணனை மூளைச்சலவையும் செய்திருக்கிறார்.

போனில் பேசியவரின் பேச்சை நம்பிய சரவணன், பல தவணைகளாக பணத்தை அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு போனில் பேசியவரை சரவணன் தொடர்பு கொண்போது அந்த செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக பதில் வந்தது. அதன்பிறகே சரவணன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதனால், அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மோசடியில் ஈடுபட்டவரைப் பிடிக்க உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் லோகநாதன், கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர் முத்துகுமார், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்த சரவணன்
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்த சரவணன்

தனிப்படை போலீஸார், டெல்லி சென்று விசாரணை நடத்தினர். சரவணனிடம் பேசிய செல்போன் நம்பர் மூலம் டெல்லி உத்தம்நகரைச் சேர்ந்த சாந்தி (37), வசந்தி (44), டெல்லி நஜப்கட், பர்புல்பிகாரைச் சேர்ந்த முனீஷ்சர்மா (44) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 3,04,500 ரூபாயை போலீஸார் மீட்டனர். இதில் சாந்தியும் வசந்தியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் தமிழில் சரவணனிடம் பேசி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. கைதானவர்களின் பின்னணி குறித்து மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``இந்தக் கும்பல் சரவணனை மட்டுமல்லாமல் இன்னும் சிலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. டெல்லியிலிருந்தபடியே தமிழகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்தக் கும்பல் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியிருக்கிறது. தமிழில் சரளமாக பேசும் வசந்தியும் சாந்தியும்தான் போனில் கஸ்டமர்களை மூளைச்சலவை செய்து வந்திருக்கிறார்கள்" என்றனர்.