Published:Updated:

`ஈஸி லோன்' ஆசைக் காட்டி, இருப்பதையும் சுருட்டிய பலே கும்பல்! - மக்களே உஷார்

கைதானவர்கள்

சென்னையில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

`ஈஸி லோன்' ஆசைக் காட்டி, இருப்பதையும் சுருட்டிய பலே கும்பல்! - மக்களே உஷார்

சென்னையில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Published:Updated:
கைதானவர்கள்

சென்னை சேப்பாக்கம், அருணாச்சலம் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி (31). இவரை சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், வங்கியிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர், ``உங்களின் வங்கிக் கணக்கு அடிப்படையில் 5 லட்சம் ரூபாய் லோன் தருகிறோம்" எனக் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட லட்சுமி, லோன் தொடர்பாக விவரங்களைக் கேட்டிருக்கிறார். பின்னர் வங்கியிலிருந்து பேசியவர், ``எந்தவித ஆவணங்களும் இல்லாமல், 5 லட்சம் ரூபாயை இன்னும் சில தினங்களில் உங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடுவோம்" என ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதற்கு இன்ஸ்சூரன்ஸ் தொகையாக 31,500 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

வினிதா
வினிதா

இதையடுத்து லட்சுமி, இன்சூரன்ஸ் தொகையை எப்படி செலுத்துவது என்று கேட்டதற்கு கூகுள் பே நம்பரை அந்த நபர், அனுப்பி வைத்திருக்கிறார். இதையடுத்து 5 லட்சம் ரூபாய் லோன் கிடைக்கும் என்ற ஆசையில் லட்சுமி, இன்சூரன்ஸ் தொகையை அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு லோன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதனால் வங்கியிலிருந்து பேசியவரின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என பதில் வந்திருக்கிறது. இதையடுத்து, தான் ஏமாந்ததை உணர்ந்த லட்சுமி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

கூகுள் பே நம்பர் யாருடையது என்று விசாரித்தனர். பின்னர் லட்சுமியிடம் செல்போனில் பேசிய நம்பர் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் லட்சுமியிடம் பணத்தை ஏமாற்றியது தொடர்பாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அரவிந்த், பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பால்ஜோசப், அயனாவரத்தைச் சேர்ந்த தெரசா, எண்ணூரைச் சேர்ந்த வினிதா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது நான்கு பேரும் தனியார் கால் சென்டரில் ஒன்றாக வேலைப்பார்த்திருக்கின்றனர். அப்போது லட்சுமியிடம் லோன் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியிருக்கின்றனர். கைதான நான்கு பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அரவிந்த்
அரவிந்த்

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னையில் கால் சென்டர் என்ற பெயரில் இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து நடந்து வந்தன. அந்த மோசடிகள் குறித்து புகார்கள் குவிந்ததும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து போலி கால்சென்டர்களை நடத்தியவர்களைக் கைதுசெய்தனர். பின்னர் போலி கால் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனாலும் இந்த சென்டர்களில் வேலைப்பார்த்தவர்கள் குரூப்பாக சேர்ந்து சிலர் தொடர்ந்து மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சேப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமியிடமும் குறிப்பிட்ட வங்கியின் பெயரைச் சொல்லி பேசி பணத்தை ஏமாற்றியிருக்கிறது ஒரு கும்பல். தற்போது 4 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இவர்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வருகிறோம். இதுபோன்ற மோசடி அழைப்புகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்" என்றார்.