`குடிபோதையில் தவறு செய்துவிட்டேன்; மன்னித்துவிடு!' - மகளுக்காகக் கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி

சென்னை அண்ணாநகரில் பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்ட கணவர் மீது காவல் நிலையத்தில் மனைவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் போக்ஸோ வழக்கில் கணவரைக் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், ப்ளஸ் டூ படிக்கும் மகளை அழைத்துக் கொண்டு அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த போலீஸாரிடம், தன்னுடைய மகளிடம் தன் கணவரே தவறாக நடந்த தகவலைக் கண்ணீரோடு கூறினார். உடனே அங்கிருந்த மகளிர் போலீஸார், `பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்களை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும். எனவே, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்' என்று கூறினர்.

இதையடுத்து, அந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறினர். உடனே மகளிர் போலீஸார், புகாராக எழுதித் தரும்படி கூறியுள்ளனர். அதனால், அந்தப் பெண், தன்னுடைய கணவர் பழனி மீது புகார் எழுதிக் கொடுத்தார்.
அந்தப் புகாரில், `எனக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் கல்லூரியிலும் 2-வது மகள் ப்ளஸ் டூ-வும் மூன்றாவது மகள் வீட்டு வேலையும் செய்து வருகின்றனர். எனக்கும் என் கணவர் பழனிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என்னுடன் 3 குழந்தைகள் உள்ளனர். வீட்டு வேலை செய்து அவர்களைக் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன்.
என் கணவரிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நான் 24.1.2020 அன்று வேலைக்குச் சென்றுவிட்டேன். அப்போது வீட்டில் என் 2-வது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவர் பள்ளிக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியில் வந்துள்ளார். அப்போது மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவர் பழனி, மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். என் மகள் சத்தம் போட்டதும் அவர் வெளியில் சென்றுவிட்டார். பின்னர், நடந்த சம்பவத்தை போனில் கண்ணீர்மல்க என்னிடம் அவள் கூறினார். இதுகுறித்து என் கணவரிடம் கேட்டதற்கு அவர் என்னை அவமரியாதையாகப் பேசினார். எனவே, என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியிடமும் தனியாக விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி அண்ணாநகர் கிழக்கு வ.உ.சி நகரைச் சேர்ந்த பழனியை (41) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான பழனி, கட்டட வேலை செய்துவருகிறார். மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்துவந்த பழனி, குடிபோதையில் அப்படி நடந்துள்ளார். தன்னுடைய தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால், பழனியின் மனைவியும் பாதிக்கப்பட்ட மகளும் அவரை மன்னிக்கவில்லை. பழனியின் மனைவி, அவரின் மகள் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனியைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.