Published:Updated:

`ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா?' -ஏடிஎம் மையத்தில் உதவி கேட்ட கணக்காளருக்கு தொழிலதிபர் கொடுத்த`ஷாக்'

தொழிலதிபர் பார்த்தசாரதி
தொழிலதிபர் பார்த்தசாரதி

சென்னையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுவர்களுக்கு உதவி செய்வதைப்போல நடித்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய நபர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

சென்னை வளசரவாக்கம், ஜெய் கார்டன், முதல் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (65). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிவருகிறார். சீனியர் சிட்டிசனான பிரபாகரன், ஊரடங்கையொட்டி கடந்த 11.5.2020-ம் தேதி, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது பார்த்தசாரதிக்கு கண்பார்வை சரியாகத் தெரியாததால் ஏடிஎம்மிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டார்.

ஏடிஎம் மையத்தில் ஹெல்மெட் அணிந்து பணம் எடுக்கும் மர்ம மனிதர்
ஏடிஎம் மையத்தில் ஹெல்மெட் அணிந்து பணம் எடுக்கும் மர்ம மனிதர்

அந்தச் சமயத்தில் ஏடிஎம் மையத்துக்கு டிப்டாப் மனிதர் ஒருவர் வந்தார். அவர், `அங்கிள் என்ன பிரச்னை?' என்று கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன்,`சார், எனக்கு சரியாக கண் தெரியவில்லை. அதனால் பின் நம்பரை டைப் பண்ண சிரமமாக உள்ளது. ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?' என பிரபாகரன் கேட்க, அதற்கு அந்த டிப்டாப் மனிதரும் ஓகே என்று கூறியுள்ளார்.

பின்னர், பிரபாகரனின் ஏடிஎம் கார்டை வாங்கிய அந்த டிப்டாப் மனிதர், ஏடிஎம்முக்குள் கார்டை நுழைத்துள்ளார். ரகசிய நம்பரை பிரபாகரன் கூற, அதை மர்ம மனிதர் டைப் பண்ணியுள்ளார். ஆனால் பணம் வரவில்லை. அதனால், `சார், உங்கள் அக்கவுன்ட்ல பேலன்ஸ் இருக்கிறதா என செக் செய்துகொள்ளுங்கள்' என்று கூறி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அந்த டிப்டாப் மனிதர் வேகமாக அங்கிருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்றார்.

உதவி செய்வது போல நடிக்கும் மர்ம மனிதர்
உதவி செய்வது போல நடிக்கும் மர்ம மனிதர்

பிரபாகரனும், பணம் வரவில்லையே என்று புலம்பியபடி அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பிரபாகரனின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வங்கியிலிருந்து வந்திருந்தது. அதில், அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 50,000 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உடனடியாக வங்கிக்குச் சென்று விசாரித்தார். அப்போது யதேச்சையாக அவர் தன் கையிலிருந்த ஏடிஎம் கார்டைப் பார்த்தபோது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவரிடம் இருந்தது அவருடைய ஏடிஎம் கார்டே இல்லை. அதனால் பிரபாகரன், குழப்பம் அடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதுதான் பிரபாகரனுக்கு ஏடிஎம் மையத்தில் சந்தித்த டிப்டாப் மனிதர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பிரபாகரன், ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உதவி கமிஷனர் மகிமைவீரன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், தலைமைக் காவலர் ஹேமகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்துக்கு முதலில் சென்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர்.

`நிறைவேறாத நீண்டநாள் ஆசை!' -தாத்தா இறந்த சில தினங்களில் விபரீத முடிவெடுத்த பேரன்
பைக்கில் செல்லும் பார்த்தசாரதி
பைக்கில் செல்லும் பார்த்தசாரதி

ஏடிஎம் மையத்தில் பிரபாகரனுடன் பேசும் மர்ம மனிதர், ஹெல்மெட் அணிந்தபடியே ஏடிஎம் மையத்துக்குள் வருவதும் பின்னர் அங்கிருந்து வெளியில் சென்று பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரின் முகம் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் அவரின் வண்டியின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர்.

அதே நேரத்தில் பிரபாகரனின் ஏடிஎம் கார்டு மூலம் இன்னொரு ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்த விவரத்தையும் வங்கியின் உதவியோடு போலீஸார் தகவல் சேகரித்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பிரபாகரனிடம் இருந்து ஏடிஎம் கார்டை நூதன முறையில் ஏமாற்றிவிட்டு இன்னொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன மர்ம மனிதர் குறித்த விவரம் போலீஸாருக்குக் கிடைத்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வளசரவாக்கம் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பிரபாகரனுக்கு உதவி செய்வதுபோல நடித்து அவரின் ஏடிஎம் கார்டுக்குப் பதிலாக இன்னொரு ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றவர் குறித்து விசாரித்தோம். விசாரணையில் வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி (50) எனத் தெரியவந்தது. இவர் விருகம்பாக்கத்தில் டெக்ஸ்டைல் கடை வைத்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது பிரபாகரனின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி 50,000 ரூபாயை எடுத்தது தெரியவந்துள்ளது. அவர் அந்தப் பணத்தை சந்தோஷமாக செலவழித்துள்ளார்.

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்த பார்த்தசாரதி, ஏடிஎம் மையங்களில் சீனியர் சிட்டிசன்கள் மற்றும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவி செய்வதுபோல நடித்து இந்த மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார். ஏற்கெனவே பார்த்தசாரதி மீது ஏடிஎம் கார்டு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பார்த்தசாரதியைக் கைது செய்து அவரிடமிருந்து 25,000 ரூபாய், மோசடிக்குப் பயன்படுத்திய பைக், 28 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். இந்த மோசடி மூலம் லட்சக்கணக்கில் பணத்தை பார்த்தசாரதி எடுத்துள்ளார்" என்றார்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பவர்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வளசரவாக்கம் போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு