Published:Updated:

`பிளாட்பார ஆயாவிடம் பதுக்கப்பட்ட, கொள்ளையடித்த பணம்!' - போலீஸில் சிக்கிய வடசென்னை `left' மதன்

கொள்ளையடித்த கடை முன் மதன் மற்றும் போலீஸார்
கொள்ளையடித்த கடை முன் மதன் மற்றும் போலீஸார்

வடசென்னையில், தொடர்ந்து 7 இடங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்த `left' மதனை ஸ்கெட்ச் போட்டு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கொரோனாவையொட்டி அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கிலும் தொடர்ச்சியாகக் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் வடசென்னையில் நடந்துவந்தன. இதையடுத்து, துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா உத்தரவின்பேரில், எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் கோ.அரிகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தலைமைக் காவலர் சுகன் ஆகியோர் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். ஓட்டேரி, எம்.கே.பி.நகர், பேசின்பாலம், புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பதிவான குற்ற வழக்குகள் குறித்து போலீஸார் விசாரித்தனர்.

ஒரே பைக்கில் மூன்று கொள்ளையர்கள்
ஒரே பைக்கில் மூன்று கொள்ளையர்கள்
``சென்னையில் செல்போன் கொள்ளை; கோவாவில் உல்லாசம்"  - குதிரை சிவாவின் அதிர்ச்சி ஹிஸ்டரி

சம்பவம் நடந்த இடங்களில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் சேகரித்து, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களைத் தேடிவந்தனர். அப்போது, 8-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒரே பைக்கில் மூன்று பேர் செல்வதைப் பார்த்த போலீஸாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இந்தச் சமயத்தில் உதவி கமிஷனர் அரிகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டேரி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த left hand மதனை கைதுசெய்தனர். அவரிடமிருந்து விலை உயர்ந்த பைக், பணம், கத்திகள், பெட்ரோல் குண்டு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மதனின் கூட்டாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மதன் மற்றும் அவரின் கூட்டாளிகள் தொடர்ச்சியாக கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். கடந்த 8-ம் தேதி, புளியந்தோப்பு, பேசின்பாலம், எம்.கே.பி.நகர் ஆகிய பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 9-ம் தேதி எம்.கே.பி.நகரில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். பொதுமக்களின் நடமாட்டத்தால் கொள்ளைச் சம்பவம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மதனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள், செல்போன்கள், பணம்
மதனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள், செல்போன்கள், பணம்
`சத்தியத்தை மீறிய கணவர்; 2 நாள்களாகப் பேசவில்லை' - கணவரை மிரட்ட விபரீத முடிவெடுத்த காதல் மனைவி

இதையடுத்து, செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மருந்துக் கடையின் பூட்டை உடைத்த இந்தக் கும்பல், 20,000 ரூபாயை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அந்தப் பணத்தை மதன், தன்னுடைய ஆயாவிடம் கொடுத்துவைத்துள்ளார். அவரின் ஆயா, பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். அதனால் போலீஸாரிடம் சிக்கினாலும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார்.

சிசிடிவி கேமரா மற்றும் ரகசியத் தகவல் மூலம் மதனைக் கைது செய்துள்ளோம். அவரின் கூட்டாளிகளான கிட் விஜய் மற்றும் அவரின் உறவினர் ஒருவரை தேடிவருகிறோம். மதன், பயன்படுத்திவந்த விலை உயர்ந்த பைக், புளியந்தோப்பு பகுதியில் திருடப்பட்டது. அந்தப் பைக்கில் பந்தாவாக வலம் வந்துள்ளார். அதிகாலை நேரத்தில் திருடும் மதன், பகலில் நோட்டமிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சிறுவயது முதலே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த மதன், ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. கொரோனா ஊரடங்கிலும் வீட்டுக்குள் முடங்கியிருக்காத மதன், குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்" என்றனர்.

மதனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை
மதனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை

போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``மதன் மீது ஏற்கெனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

இடது கையை மதன் அதிகம் பயன்படுத்துவார். அதனால்தான் அவரை லெஃப்ட், லொட்டை என அவரின் நண்பர்கள் அடைமொழி வைத்து அழைத்துவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொரோனா பாதுகாப்புப் பணி காரணமாக காவல்துறையினர் கண்டுகொள்ள மாட்டார்கள் எனக் கருதிய மதன், தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு