Published:Updated:

சென்னை: மனஅழுத்தத்தைக் குறைக்க பயிற்சி! - வீராங்கனையிடம் அத்துமீறிய பயிற்சியாளர்

பயிற்சியாளர் மகேஷ்
பயிற்சியாளர் மகேஷ்

சென்னை தொழிலதிபரின் மகளும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான மாணவிக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் குடியிருக்கும் பிரபல தொழிலதிபரின் மகள், தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர், ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகவும் இருக்கிறார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார். தொடர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாகத் தொழிலதிபரின் மகளுக்கு வீட்டிலேயே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ் (42) என்பவர் தொழிலதிபரின் மகளுக்குப் பயிற்சி அளித்து வந்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
மாதிரிப் படம்

கடந்த 10-ம் தேதி மகேஷ் பயிற்சி அளித்தார். பயிற்சியின்போது இருவர் மட்டும் அங்கு இருந்துள்ளனர். மன அழுத்தப் பயிற்சியின்போது மாணவி கண்களை மூடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மகேஷ், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அங்கு வந்துள்ளனர். அதற்குள் பயிற்சியாளர் மகேஷ், தன்னுடைய பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

`டைவ் அடித்து அசத்திய இந்தியச் சிறுவர்கள்’ - வியந்து பாராட்டிய ஜிம்னாஸ்டிக் ஜாம்பவான்!

மகேஷ், தன்னிடம் தவறாக நடந்ததை பெற்றோரிடம் கூறி மாணவி கதறியழுதார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக ஆன்லைனில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு புகாரளித்தனர். புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டார்.

அடையாறு மகளிர் காவல் நிலையம்
அடையாறு மகளிர் காவல் நிலையம்

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், பயிற்சியின்போது ஆழ்ந்த மனநிலைக்கு சென்றேன். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மகேஷ், என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதை தடுத்து நான் சத்தம் போட்டதால் மகேஷ் தப்பி ஓடிவிட்டார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து, மகேஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைப்பதற்குமுன் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அந்த மாணவி, ஊரடங்கினால் வீட்டிலிருந்தே பயிற்சி பெற்றுவந்துள்ளார். அவரின் மனஅழுத்தத்தைக் குறைக்க மகேஷ் மூலம் பயிற்சி அளித்துள்ளனர். அப்போதுதான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விசாரணையின்போது அதை ஒப்புக் கொண்டதால் மகேஷை கைது செய்துள்ளோம்" என்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரிப் புகைப்படம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஊரடங்கில் குடும்ப வன்முறை சம்பவங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. ஆன்லைனில் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பயிற்சியாளர் மகேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆன்லைனில் புகார் வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் பெண்கள், குழந்தைகள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக இருக்கும்" என்றார்.

சென்னை தொழிலதிபரின் மகளும் மாநில ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு