சென்னை, சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே.சாலை பகுதியில் வேல்முருகன் (40), வினோதினி (37) தம்பதி வசித்துவந்தனர். வேல்முருகன் கட்டடத் தொழில் செய்துவந்த நிலையில், வினோதினி அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்துவந்திருக்கிறார். தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வரும் வேல்முருகன், வினோதினியிடம் சண்டை போடுவதை வழக்கமாகக்கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில், கீழே விழுந்து அடிபட்டுவிட்டதாகக் கூறி, வேல்முருகனை நேற்று மாலை சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார் அவருடைய மனைவி.

இந்த நிலையில், வேல்முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மேலும், மருத்துவர்கள் அவரின் உடலில் கத்தியால் குத்திய காயம் இருந்தது குறித்துக் கேட்டபோது, 'குடிபோதையில் அவராகக் குத்திக்கொண்டார்' என்று வினோதினி கூறியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், இந்தச் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் பகுதி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் வினோதினியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். இதனால் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஒருகட்டத்தில், வினோதினி தன் கணவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் வினோதினி, ``என்னுடைய கணவர் ஜனவரி 9-ம் தேதி குடிபோதையில் சகதியில் விழுந்து வீட்டுக்கு வந்தார். அதனால் அவரைக் குளிப்பாட்டி வீட்டுக்குள் அனுப்பினேன். அதீத போதையிலிருந்த என் கணவர், வீட்டுக்குள் சிறுநீர் கழித்தார். இதனால் அவருடன் வாக்குவாதம் செய்தேன். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியைக்கொண்டு என் கணவரைக் குத்தினேன்" எனக் கூறியிருக்கிறார்.

அதையடுத்து, கணவனைக் கொலைசெய்துவிட்டு நாடகமாடிய வினோதினியை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.