திருவண்ணாமலை மாவட்டம், நரியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 20). இவர், கீழ்ப்பாக்கம் கார்டன் அவுட் சர்குலர் சாலைப் பகுதியில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்துவருகிறார். சம்பவத்தன்று இவரின் செல்போனையும், இவருடன் வேலை பார்த்துவரும் மூன்று பேரின் செல்போன்களையும் காணவில்லை என டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் ஜானகிராமன் புகாரளித்தார். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் டி.பி.சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஜானகிராமன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது இளைஞர்கள் இருவர், செல்போன்களைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் விசாரித்தபோது செல்போன் திருட்டில் ஈடுபட்டது டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த முத்து ( 22) என்று தெரியவந்தது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் டி.பி.சத்திரம் காவல் குடியிருப்பில் வசிக்கும் தலைமைக் காவலர் ஒருவரின் 17 வயது மகனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரித்தோம். பின்னர் இருவரிடமிருந்தும் செல்போன்களைப் பறிமுதல் செய்தோம். முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவிருக்கிறோம். தலைமைக் காவலரின் மகன் சிறார் என்பதால், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கவிருக்கிறோம்" என்றனர்.
போலீஸ் ஏட்டுவின் மகனுக்கு செல்போன் திருட்டு வழக்கில் தொடர்பு என்ற தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.