சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 17 வயது சிறுமியைக் காணவில்லை என 19.8.2021-ம் தேதி சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சிறுமியைக் காணவில்லை என போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். விசாரணையில் சிறுமியின் வீட்டின் அருகிலுள்ள பிரியாணிக் கடையில் வேலைபார்க்கும் மஞ்சுநாதன் (21) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் போலீஸார் தேடினர்.

சிறுமியும் மஞ்சுநாதனும் திருவண்ணாமலையில் இருக்கும் தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் சிறுமியை மீட்டனர். இளைஞர் மஞ்சுநாதனை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துவந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமியை மஞ்சுநாதன் காதலித்துவந்திருக்கிறார். அதனால் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சிறுமிக்கு மஞ்சுநாதன், பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். சிறுமி அளித்த தகவலின்படி மஞ்சுநாதன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைதுசெய்திருக்கிறோம். கைதான மஞ்சுநாதன், பெங்களூருவைச் சேர்ந்தவர்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்னொரு சம்பவம்
மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 14 வயது சிறுமியின் அம்மா, பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். அதே இடத்தில் வேலை பார்த்துவருபவர் பால்ராஜ். அதனால் சிறுமியின் வீட்டுக்கு பால்ராஜ் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். அதனால் சிறுமிக்கும் பால்ராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் சிறுமியை பால்ராஜ் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பால்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமி, அவரின் அம்மாவிடம் தகவல் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பால்ராஜிடம் விசாரணை நடத்தினர். பிறகு சிறுமி அளித்த தகவலின்படி பால்ராஜ்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட பால்ராஜ், ஈரோடு மாவட்டம், காவேரி ரோடு, வீரப்பசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர்.

மற்றொரு சம்பவம்
சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வனஜா (48) (பெயர் மாற்றம்) என்பவர் வசித்துவருகிறார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வனஜா தாய் வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவருகிறார். வனஜாவின் தம்பி அண்ணாமலை (40) என்பவருக்குத் திருமணமாகவில்லை. அதனால் அவரும் வனஜாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தார். இந்தச் சமயத்தில் மதுவுக்கு அடிமையான அண்ணாமலை, தனது அக்கா வனஜாவை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து வனஜா அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அண்ணாமலையிடம் விசாரித்தனர். விசாரணையில் வனஜாவிடம் அண்ணாமலை தவறாக நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மயிலாப்பூரைச் சேர்ந்த அண்ணாமலையை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.